ஆம்பன் புயலால் பாதிக்கப்பட்டுள்ள மேற்கு வங்கம் மற்றும் ஒடிசா பகுதிகளை அமைச்சரவை செயலர் ராஜிவ் கவுபா ஆய்வு செய்துள்ளார்.
New Delhi: ஆம்பன் புயல் காரணமாக பருவமழை பாதித்திருப்பதாகவும், இதனால் வழக்கத்தை விட தாமதாக பருவமழை தொடங்கும் என்றும் இநதிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக் கடலில் உருவான ஆம்பன் புயல் நேற்று மேற்கு வங்கத்தில் கரையை கடந்தது. புயலால் ஏற்பட்ட பாதிப்பில் சிக்கி 72 பேர் உயிரிழந்துள்ளனர். சுமார் ஒரு லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு சேதம் ஏற்பட்டிருக்கலாம் என மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், பருவமழையையும் ஆம்பன் புயல் விட்டு வைக்கவில்லை. இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மையத்தின் இயக்குனர் மிருதுஞ்செய் மொகபத்ரா கூறியதாவது-
வழக்கமாக பருவமழை ஜூன் 1-ம்தேதி கேரளாவில் தொடங்கி விடும். ஆனால் ஆம்பன் புயல் பருவமழை தொடங்குவதற்கான வானிலையை பாதித்து விட்டது. இதனால் சற்று தாமதமாகத்தான் பருவமழை தொடங்கும். கேரளாவில் ஜூன் 5-ம்தேதி முதல் பருவமழை தொடங்கும் என எதிர்பார்க்கிறோம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார். நாட்டின் வானிலையில் நல்ல மற்றும் தீய விளைவுகளை ஆம்பன் புயல் ஏற்படுத்தியிருப்பதாகவும் மொகபத்ரா தெரிவித்துள்ளார்.
ஆம்பன் புயலால் பாதிக்கப்பட்டுள்ள மேற்கு வங்கம் மற்றும் ஒடிசா பகுதிகளை அமைச்சரவை செயலர் ராஜிவ் கவுபா ஆய்வு செய்துள்ளார்.
புயலில் சிக்கி மேற்கு வங்கத்தில் 72 பேர் உயிரிழந்துள்ள நிலையில், அவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 2.50 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என மேற்கு வங்க அரசு அறிவித்துள்ளது.