This Article is From Jul 18, 2018

2003 ஆம் ஆண்டுக்குப் பிறகு நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம்..!

நாடாளுமன்றத்தின் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. இந்நிலையில்,மத்தியில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டது

New Delhi:

நாடாளுமன்றத்தின் பருவகால கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. இந்நிலையில், மத்தியில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டது.

சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி தான் நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து முதலாவதாக நோட்டீஸ் அனுப்பியது. அதைத் தொடர்ந்து காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகளும் அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர வலியுறுத்தி லோக்சபாவில் நோட்டீஸ் அனுப்பின. இதை ஏற்ற லோக்சபா சபாநாயகர் சுமித்ரா மகாஜன், ‘சீக்கிரமே இந்த தீர்மானம் குறித்தான விவாத நாள் குறித்து தெரியபடுத்தப்படும்’ என்று கூறினார். 

இதையடுத்து பேசிய நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் ஆனந்த் குமார், ‘பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசின் மீது எதிர்கட்சிகளுக்கு வேண்டுமானால் நம்பிக்கை இல்லாமல் இருக்கலாம். ஆனால், இந்த சபையில் ஒரு விஷயத்தை நான் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். நாட்டின் மக்களுக்கு இந்த அரசின் மீது மிகுந்த நம்பிக்கை இருக்கிறது’ என்று கூறினார். 

நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஏற்க குறைந்தபட்சம் 50 எம்.பி-க்களின் ஆதரவு வேண்டும் என்பது நடைமுறை. 

இந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தால் பாஜக-வுக்கு எந்த வித பாதிப்பும் இருக்காது. அதற்கு தனியாக 273 சீட்கள் இருக்கின்றன. இது பாதியளவை விட மிக அதிகம். ஆனால், பாஜக-வுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் விதத்தில் இந்த நடவடிக்கை எதிர்கட்சிகளால் எடுக்கப்பட உள்ளது.

கடந்த 2003 ஆம் ஆண்டு, எதிர்கட்சித் தலைவராக இருந்த சோனியா காந்தி, அடல் பிகாரி வாஜ்பாய் தலைமையிலிருந்த மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தார். இந்த தீர்மானம், ஆளுங்கட்சியால் தோற்கடிக்கப்பட்டது. 

2008 ஆம் ஆண்டு காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசு, ஆட்சி புரிந்து கொண்டிருந்தது. காங்கிரஸ் கட்சிக்கு வெளியிலிருந்து ஆதரவு அளித்து வந்த இடதுசாரிகள் கூட்டணியிலிருந்து விலகவே, பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்திற்கு காங்கிரஸ் தள்ளப்பட்டது. அப்போது பெரும்பான்மையை விட 19 எம்.பி-க்கள் காங்கிரஸுக்கு ஆதரவாக நின்றனர். 

அதேபோல 1999 ஆம் ஆண்டு பாஜக தலைமையிலான கூட்டணி அரசு ஆட்சியில் இருந்தது. வாஜ்பாய் பிரதமராக இருந்தார். பாஜக-வுக்கு ஆதரவு அளித்து வந்த அதிமுக, கூட்டணியிலிருந்து விலகவே, பெரும்பான்மையை நிரூபிக்க அரசு நிர்பந்திக்கப்பட்டது. இந்த வாக்கெடுப்பில் வாஜ்பாய் தலைமையிலான அரசு ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோல்யுற்று ஆட்சியை பறிகொடுத்தது.

.