This Article is From Jul 18, 2018

நம்பிக்கை வாக்கெடுப்பு குறித்து கருத்து தெரிவித்த சோனியா காந்தி

இதில் நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு நடத்த தெலுங்கு தேசம் கட்சி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை சபாநாயகர் ஏற்றுக்கொண்டுள்ளார்

நம்பிக்கை வாக்கெடுப்பு குறித்து கருத்து தெரிவித்த சோனியா காந்தி
New Delhi:

நாடாளுமன்ற கூட்டத்தொடர் இன்று தொடங்கியுள்ளது. இதில் நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு நடத்த தெலுங்கு தேசம் கட்சி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை சபாநாயகர் ஏற்றுக்கொண்டுள்ளார்.

இதனால், இந்த மழைக்கால நாடாளுமன்ற கூட்டத்தொடரில் என்ன நடக்கும் என்கிற பரபரப்பு எழுந்துள்ளது. முன்னதாக கடந்த கூட்டத்தொடரில் நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு நடத்த தெலுங்கு தேசம் கட்சி கொண்டு வந்த மனுவை சபாநாயகர் சுமித்தா மகாஜன் ஏற்றுக்கொள்ளவில்லை.

ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து கோரி தெலுங்கு தேசம் கட்சியினர் தொடர்ந்து போராடி வருகின்றனர். ஆனால், மத்திய அரசு அதை வழங்க மறுத்தத்தால் கூட்டணியில் இருந்து தெலுங்கு தேசம் கட்சி விலகியது.

இந்நிலையில், இன்று நாடாளுமன்றம் கூடிய நிலையில், தெலுங்கு தேச கட்சி எம்.பி கேசினேனி சீனிவாஸ் கொண்டு வந்த மனு ஏற்கப்பட்டது. இந்த மனுவின் மீது வாக்கெடுப்பு நடத்த இன்னும் 10 நாட்கள் அவகாசம் உள்ளது. அதே நேரம் தனியாக ஒரு தீர்மானத்தைக் கொண்டு வர காங்கிரஸ் கட்சியும் முடிவு செய்துள்ளது.

இந்நிலையில், காங்கிரஸ் கொண்டு வரும் மனுவை ஆதரிக்க போதுமான உறுப்பினர்கள் எண்ணிக்கை உள்ளதா என்று சோனியா காந்தியிடம் பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது அவர் கூறுகையில், எங்களுக்கு போதிய உறுப்பினர் எண்ணிக்கை இல்லை என்று யார் சொன்னது? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்நிலையில் வருகிற ஞாயிற்றுக்கிழமை காங்கிரஸ் கட்சியின் உயர்மட்டக் குழு நாடாளுமன்றத்தில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிக்க உள்ளது. இருப்பினும் பாஜகவிற்கு இந்த மனுவை எதிர்த்து வெற்றி பெற போதுமான உறுப்பினர் எண்ணிக்கை உள்ளது.

நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் அனந்த் குமார் எழுந்து பேசுகையில், ''எதிர்க்கட்சிகள் கொண்டு வரும் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை எதிர்கொள்ள மத்திய அரசு தயாராக இருக்கிறது. நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீது விவாதம் நடத்தப்பட்டால் அனைத்தும் சரியாகிவிடும். பிரதமர் மோடி தலைமையிலான அரசு மீது மக்கள் மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளனர் என்பது தெளிவாகும்'' என்று தெரிவித்தார்.

இதற்கு முன்னதாக கடந்த 2003ம் ஆண்டு சோனியா காந்தி தலைமையில் எதிர்க்கட்சியாக இருந்த காங்கிரஸ், பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் தலைமையிலான பாஜக அரசு மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. ஆனால் அது தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது.

.