This Article is From Aug 08, 2020

தமிழகத்தில் உள்ள கொரோனா ஊடரங்கு கட்டுப்பாடுகளிலிருந்து மேலும் தளர்வுகள் - முதல்வர் அறிவிப்பு!

தற்போது மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள சிறிய திருக்கோயில்கள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள கொரோனா ஊடரங்கு கட்டுப்பாடுகளிலிருந்து மேலும் தளர்வுகள் - முதல்வர் அறிவிப்பு!

தமிழ்நாடு முழுவதும் ஓட்டுநர் பயிற்சி பள்ளிகள் 10.8.2020 முதல் செயல்பட அனுமதிக்கப்படுகிறது

தமிழகத்தில் இம்மாத இறுதி வரை, கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் நோக்கில் ஊரடங்கு உத்தரவு அமல் செய்யப்பட்டுள்ள நிலையில், தமிழக அரசு இன்று சில தளர்வுகளை அறிவித்துள்ளது. 

இது குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, “அதிமுக அரசு, கொரோனா தொற்றிலிருந்து பொதுமக்களை பாதுகாத்து, அவர்களுக்குத் தேவையான தடுப்பு நடவடிக்கைகளை எடுத்தும், சிகிச்சைகளை அளித்தும், நிவாரணங்களை வழங்கியும் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. நோய்த் தொற்றின் போக்கு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு, பொதுமக்களின் ஒத்துழைப்பையும், நோய்த் தொற்றின் நிலையையும் கருத்தில் கொண்டு, ஊரடங்கில் படிப்படியாக தளர்வுகள் வழங்கப்பட்டு வருகிறது. 

ஏற்கனவே ஊராட்சி, பேரூராட்சி மற்றும் நகராட்சிப் பகுதிகளில் உள்ள சிறிய திருக்கோயில்கள், சிறிய மசூதிகள், தர்க்காக்கள், தேவாலயங்கள் ஆகிய வழிபாட்டு தலங்களுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர்களின் அனுமதியுடன் பொதுமக்கள் தரிசனம் அனுமதிக்கப்பட்டுள்ளது. அரசு ஏற்கனவே வெளியிட்டுள்ள நிலையான வழிகாட்டி நடைமுறைகளை பின்பற்றி, தற்போது மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள சிறிய திருக்கோயில்கள்; அதாவது, 10,000 ரூபாய்க்கும் குறைவாக ஆண்டு வருமானம் உள்ள திருக்கோவில்களிலும், சிறிய மசூதிகளிலும், தர்க்காக்களிலும், தேவலாயங்களிலும் மாவட்ட ஆட்சித் தலைவர்களின் அனுமதியுடன் 10.8.2020 முதல் பொதுமக்கள் தரிசனம் அனுமதிக்கப்படுகிறது. சென்னை மாநகராட்சிப் பகுதியில் இதற்கான அனுமதியை சென்னை மாநகராட்சி ஆணையரிடம் பெற வேண்டும். மற்ற மாநகராட்சிப் பகுதிகளில் இதற்கான அனுமதியை சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சித் தலைவரிடம் பெற வேண்டும்.

அரசு வெளியிடும் நிலையான வழிகாட்டி நடைமுறைகளை பின்பற்றி, தமிழ்நாடு முழுவதும் ஓட்டுநர் பயிற்சி பள்ளிகள் 10.8.2020 முதல் செயல்பட அனுமதிக்கப்படுகிறது. கொரோனா நோய் பரவலை கட்டுப்படுத்த, அரசின் நிலையான வழிகாட்டி முறைகளை பொதுமக்கள் கடைபிடிக்கவும், ஒத்துழைப்பு வழங்கவும் பொதுமக்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார். 

.