ஹைலைட்ஸ்
- நேற்று சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் மழை பெய்தது
- இன்று தெற்கு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது
- சென்னையில் இரவு மழை பெய்ய வாய்ப்புள்ளது
தமிழகம் மற்றும் புதுச்சேரயில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
அண்டை மாநிலமான கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால் அம்மாநிலத்தின் வடக்கு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. அங்கு வரும் 18 ஆம் தேதி வரை கனமழை தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று ஒருசில இடங்களில் இன்று இடியுடுன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து வானிலை ஆய்வு மையம், 'தென்மேற்குப் பருவக்காற்று ஈரப்பதத்துடன் வீசிய காரணத்தாலும் வெப்பச் சலனம் காரணமாகவும் தமிழகத்தின் வட கடலோர மாவட்டங்களில் நேற்று மழை பெய்தது. அதே நிலை இன்றும் நீடிப்பதால் மழை தொடரும். இதனால் இன்று திண்டுக்கல், தேனி, கோயம்புத்தூர், நீலகிரி, நெல்லை ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும். அதே நேரத்தில் மாநிலத்தின் உள் மாவட்டங்களில் பலத்த காற்றுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையைப் பொறுத்தவரையில் பகலில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவில் மழை பெய்ய வாய்ப்புள்ளது' என்றுள்ளனர்.
வடக்கு மற்றும் தெற்கு கடலோரப் பகுதிகளில் 60 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்று கூறப்பட்டுள்ளதால், மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது. தென் மேற்கு பருவமழை தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பெய்து வருவதால் விவசாயிகளும் மக்களும் மகிழ்ச்சியில் உள்ளனர்.