'கட்டுப்பாட்டுப் பகுதிகளில், எந்தவிதமான செயல்பாடுகளும் அனுமதிக்கப்பட மாட்டாது'
ஹைலைட்ஸ்
- தமிழகத்திலேயே சென்னையில்தான் கொரோனா பாதிப்பு அதிகம்
- சென்னை எல்லைக்கு உட்பட்ட இடத்தில் முழு ஊரடங்கு அமலுக்கு வருகிறது
- சென்னையில் ஜூன் 30 வரை முழு ஊடரங்கு அமலில் இருக்கும்
சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் கொரோனா வைரஸ் தொற்று தொடர்ந்து அதிகரித்த வந்ததனால், வரும் 19 ஆம் தேதி முதல் மீண்டும் முழு ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வருகிறது. சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட இடங்களுக்கு இந்த ஊரடங்கு உத்தரவு ஜூன் 30 ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த முழு ஊரடங்கு காலத்தில் மருத்துவமனைகள், மருத்துவ பரிசோதனைக் கூடங்கள், அமரர் ஊர்தி சேவைகளுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. மாநில மற்றும் மத்திய அரசுத் துறைகள் 33 சதவீத பணியாளர்களுடன் செயல்படும். வங்கிகளும் 33 சதவீத பணியாளர்களோடு இயங்கும்.
காய்கறி கடைகள், மளிகைக் கடைகள் மற்றும் பெட்ரோல் பங்குகள் உரிய விதிமுறைகளுக்கு உட்பட்டு சமூக இடைவெளியுடன் காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.
வாடகை ஆட்டோ, டாக்ஸி மற்றும் தனியார் வாகன உபயோகத்திற்கு அனுமதி கிடையாது. கன்டெயின்மென்ட் மண்டலங்களில் இருக்கும் அரசு பணியாளர்கள் பணிக்கு வரத் தேவையில்லை. தேனீர் கடைகள் இயங்க அனுமதி கிடையாது.
சென்னையில் இருந்து திருமணம், மருத்துவம், இறப்பு ஆகிய காரணங்களுக்காக பிற மாவட்டங்களுக்குச் செல்ல, தகுந்த ஆதாரங்களை சமர்ப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு மட்டுமே இ-பாஸ் அனுமதி வழங்கப்படும்.
அதே நேரத்தில் அரசு தரப்பு, '21.6.2020 மற்றும் 28.6.2020 ஆகிய இரு ஞாயிற்றுக்கிழமைகளில் மேற்கண்ட எந்தவித தளர்வும் இன்றி முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படும். அதாவது, 20.6.2020 அன்று நள்ளிரவு 12 மணி முதல் 22.6.2020 காலை 6 மணி வரையிலும், எந்தவித தளர்வும் இன்றி முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படும்.
அதேபோன்று, 27.6.2020 அன்று நள்ளிரவு 12 மணி முதல், 29.6.2020 காலை 6 மணி வரையிலும் எந்தவித தளர்வும் இன்றி முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படும். இவ்விரு நாட்களிலும், பால் விநியோகம், மருத்துவமனைகள், மருந்துக் கடைகள், மருத்துவமனை ஊர்திகள், அவசர மற்றும் அமரர் ஊர்திகள் தவிர வேறு எந்தவிதமான செயல்பாடுகளுக்கும் அனுமதி கிடையாது. அவசர மருத்துவத் தேவைகளுக்கு மட்டுமே தனியார் வாகன உபயோகம் அனுமதிக்கப்படுகிறது.
கட்டுப்பாட்டுப் பகுதிகளில், எந்தவிதமான செயல்பாடுகளும் அனுமதிக்கப்பட மாட்டாது. முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் காலத்தில் இது மிகவும் தீவிரமாக்கப்பட்டு கண்காணிக்கப்படும். கட்டுப்படுத்தப்பட்ட பகுதியில் உள்ள வீடுகளுக்கும் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட வீடுகளுக்கும் அத்தியாவசியப் பொருட்கள் வழங்குவதை உள்ளாட்சி அமைப்புகள் உறுதி செய்யும். இந்தப் பகுதிகளில் கிருமி நாசினி தெளிப்பு ஒரு நாளைக்கு இருமுறை தெளிக்கப்படும்' என்று தெரிவித்துள்ளது.