Indonesia Tsunami 2018: அலை சீற்றத்திற்காக சரியான காரணம் குறித்து இந்தோனேசிய புவியியல் ஆய்வு மையம் ஆய்வு நடத்தி வருகிறது.
Jakarta: இந்தோனேசியாவில் எழுந்துள்ள கடல் அலை சீற்றத்தில் சிக்கி 43 பேர் உயிரிழந்துள்ளனர். தெற்கு சுமத்ரா பகுதியில் நடந்த இந்த சம்பவத்தில் நூற்றுக்கணக்கான வீடுகள், கட்டிடங்கள் சேதம் அடைந்திருக்கின்றன.
குறைந்தது 43 பேர் பலியாகி இருப்பதாகவும், 600 பேர் காயங்களுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
பவுர்ணமி மற்றும் கடலுக்குள் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக அலைச் சீற்றம் ஏற்பட்டிருக்கலாம் என அதிகாரிகள் கூறுகின்றனர். சுனாமி ஏற்பட வாய்ப்பில்லை என்று கூற முடியாது எனவும் அவர்கள் தெரிவித்தனர். இருப்பினும், இந்த சம்பவம் ஏற்பட்டதற்கான துல்லியமான காரணத்தை இந்தோனேசிய புவியியல் ஆய்வு மையம் ஆய்வு செய்து வருகிறது.
காயம் அடைந்தவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும்.
கடந்த 2004-ம் ஆண்டின்போது இந்தோனேசியாவின் சுமத்ரா தீவு பகுதியில் சுனாமி ஏற்பட்டது. இதில் 2.2 லட்சம்பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.