ராகுல் காந்தி தலைவர் பொறுப்பில் நீடிக்க வலியுறுத்தி காங்கிரசார் சென்னையில் நேற்று பேரணி நடத்தினர்.
அனுமதியின்றி பேரணி நடத்திய புகாரின்பேரில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி, முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர், வசந்த குமார் எம்.பி. உள்ளிட்ட 500 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வியை சந்தித்தது. இதற்கு பொறுப்பு ஏற்று கட்சியின் தலைவர் ராகுல் காந்தி பதவி விலகப்போவதாக அறிவித்துள்ளார். இதுதொடர்பாக காங்கிரசின் உயர் மட்ட குழுவான காரியக் கமிட்டியில் ராகுல் ராஜினாமா கடிதத்தை அளித்தார்.
ஆனால் இதனை காரியக் கமிட்டி ஏற்றுக் கொள்ளவில்லை. இருப்பினும், தனது முடிவில் ராகுல் பிடிவாதமாக உள்ளார். அப்செட்டாக இருக்கும் அவரை கட்சியின் மூத்த தலைவர்கள் சந்தித்து, பதவியில் தொடர வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் காங்கிரஸ் தலைவர் பொறுப்பில் ராகுல் காந்தி தொடர வேண்டும் என வலியுறுத்தி, சென்னை தேனாம்பேட்டையில் தமிழக காங்கிரஸ் சார்பாக பேரணி நடத்தப்பட்டது. இதற்கு அனுமதி பெறப்படவில்லை என்று கூறப்படுகிறது. பேரணியின்போது 2 பேர் தீக்குளிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி, திருநாவுக்கரசு எம்.பி., வசந்த குமார் எம்.பி. உள்பட 500 பேர் மீது தேனாம்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சட்டவிரோதமாக கூடுதல் (ஐ.பி.சி. 143), அரசு ஊழியர்களின் உத்தரவை மீறுதல் (ஐ.பி.சி. 188) உள்பட 3 பிரிவுகளின் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.