2018 ஏப்ரல் வரை 6 லட்சத்திற்கும் அதிகமான இந்தியர்கள் க்ரீன் கார்டுக்காக காத்துள்ளனர்.
Washington: அமெரிக்காவில் ஆண்டு தோறும் லட்சக்கணக்கான வெளிநாட்டவர்கள் பணிக்காக செல்கின்றனர். அவர்கள் தற்காலிகமாக தங்குவதற்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படுகிறது. சட்டப்பூர்வமாக நிரந்தரமாக அங்கு தங்க வேண்டும் என்றால் க்ரீன் கார்டு பெற வேண்டும். இதனைப் பெறுவதற்கு 6 லட்சத்திற்கும் அதிகமான இந்தியர்கள் விண்ணப்பித்துள்ளனர்.
ஏப்ரல் மாதம் வரையிலான தகவலின்படி பணிபுரிவோர் அவர்களது மனைவி அல்லது கணவன், குடும்பத்தினர், குழந்தைகள் உள்பட மொத்தம் 632,219 இந்தியர்கள் க்ரீன் கார்டுக்காக விண்ணப்பித்துள்ளார்கள்.
அதே நேரத்தில் கடந்த 2017-ம் ஆண்டில் மட்டும் 60,394 இந்தியர்களுக்கு க்ரீன் கார்டு கிடைத்துள்ளது. இவற்றில் எச்.-1பி விசா அடிப்படையில் முன்னுரிமை அளிக்கப்பட்டு அதிகபட்சமாக 23,569 பேர் க்ரீன் கார்டு பெற்றுள்ளனர்.
க்ரீன் கார்டு வைத்திருப்பதன் மூலம் ஒருவர் அமெரிக்காவில் நிரந்தரமாக தொழில் செய்யவோ, பணி புரியவோ முடியும். திறமை மிக்க இந்தியர்கள் எச்.-1 பி விசா அடிப்படையில் பணிக்கு அமர்த்தப்படுகிறனர். இவர்கள், சமீபத்தில் மாற்றி அமைக்கப்பட்ட விதிகளின்படி கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த விதிகளின்படி எச்-1பி விசா வைத்திருப்பவர்களில் 7 சதவீதம் பேருக்கு மட்டுமே க்ரீன் கார்டு அளிக்கப்படுகிறது.
மேலும் ஒரு அதிர்ச்சி அளிக்கும் தகவலாக, அமெரிக்காவில் க்ரீன் கார்டு பெறும் இந்தியர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. முந்தைய ஆண்டுகளை விட கடந்த 2 ஆண்டுகளில் க்ரீன் கார்டு பெற்ற இந்தியர்களின் எண்ணிக்கை குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.