முல்லை பெரியாறு அணைக்கு மாற்றாக புதிய அணை கட்டுவதற்கான ஆய்வுக்கு கேரள அரசுக்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி அளித்திருந்தது. இந்த விவகாரத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள தமிழக முதல்வர் பழனிசாமி, பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி உள்ளார்.
இதுகுறித்து அவர் எழுதியுள்ள கடிதத்தில்,
“கடந்த செப்டம்பர் மாதம், 9-ம் தேதி அன்று மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்தின் மதிப்பீட்டு நிபுணர் குழுவானது, முல்லைப் பெரியாறு அருகே புதிய அணை கட்டுவதற்காக சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆய்வறிக்கை தயாரிக்க கேரள அரசுக்கு அனுமதி அளித்துள்ளது.
இது தமிழக மக்களிடையே மிகப்பெரிய அதிர்ச்சியையும் சந்தேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் கேரள அரசின் செயலும், அதனை மத்திய அரசு ஊக்கப்படுத்துவதும் உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு முற்றிலும் எதிரானதாகும்.
புதிய அணை கட்டும் முடிவை கேரள அரசு தமிழ்நாட்டின் மீது திணிக்க முடியாது என்றும், அது இரு மாநில அரசுகளின் ஒப்புதலுடன்தான் நடைபெற வேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் அந்த உத்தரவில் தெரிவித்துள்ளது.
இந்த விவகாரத்தில் தாங்கள் தலையிட்டு முல்லைப் பெரியாறு அருகே புதிய அணை கட்ட அளித்துள்ள அனுமதியைத் திரும்பப் பெற வனத்துறை அமைச்சகத்திற்கு உத்தரவிட வேண்டும்.
மேலும், வருங்காலத்திலும் உச்சநீதிமன்ற உத்தரவுக்கு எதிராக கேரள அரசு செயல்பட்டால் அதனை ஊக்குவிக்கக் கூடாது என வனத்துறை அமைச்சகத்திற்கு அறிவுறுத்த வேண்டும்” என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அக்கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.