This Article is From Sep 07, 2018

முல்லைப் பெரியாறு அணை விவகாரம்: கடுகடுத்த உச்ச நீதிமன்றம்!

இந்த வழக்கின் நோக்கமே அணையின் நீர் அளவை 139 அடிக்குக் கீழ் கொண்டு வருவது தான்

முல்லைப் பெரியாறு அணை விவகாரம்: கடுகடுத்த உச்ச நீதிமன்றம்!

முல்லைப் பெரியாறு அணையில், நீர் அளவை நிர்ணயிப்பதற்கான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. அணையின் நீர் அளவை குறைக்கச் சொல்லி கேரளாவும், குறிப்பிடப்பட்ட நீர் அளவு இருக்க வேண்டும் என்று தமிழகமும் தொடர்ந்து வாதிட்டு வருகின்றன. இரண்டு தரப்பும் வழக்கை இழுத்துக் கொண்டே போவதால் உச்ச நீதிமன்றம், ‘தமிழக அரசு, கேரள அரசு மற்றும் மத்திய அரசு சூழ்நிலைக்குத் தகுந்தது போல செயல்பட முடியவில்லை என்றால், இந்த விஷயத்தில் நாங்கள் ஒன்றும் செய்ய முடியாது’ என்று கடுகடுத்துள்ளது.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் கன்வாலிகர் மற்றும் சந்திராசூத் ஆகிய 3 பேர் அடங்கிய அமர்வு, முல்லைப் பெரியாறு அணையின் தன்மையை சோதிக்க சர்வதேச வல்லுநர்கள் குழு அமைக்க வேண்டும் என்று கோரிய வழக்கை விசாரித்தனர். அந்த மனுவில், ‘முல்லைப் பெரியாறு அணைக்குக் கீழே வாழும் மக்களின் பாதுகாப்பைக் கணக்கில் கொண்டு, அணையின் நீர் அளவு 139 அடி மட்டுமே இருக்கும் படி செய்ய வேண்டும்’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது. 

இதற்கு தமிழக அரசு தரப்பு வழக்கறிஞர் சேகர் நபாடே கடும் எதிர்ப்பு தெரிவித்தார். அவர் தொடர்ந்து, ‘இந்த வழக்கின் நோக்கமே அணையின் நீர் அளவை 139 அடிக்குக் கீழ் கொண்டு வருவது தான். ஆனால் உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல்படி அணையின் நீர் அளவை தமிழகம் 142 அடிக்கு உயர்த்தலாம். மேலும் அணையை சீர் அமைக்கும் நடவடிக்கைகள் எடுத்தால் 152 அடி வரைக்கும் கூட நீரை உயர்த்தலாம் என்று உத்தரவு உள்ளது. ஆனால், நீர் அளவை குறைக்கும் நோக்கிலேயே வாதங்கள் வைக்கப்பட்டு வருகின்றன’

இதையடுத்து உச்ச நீதிமன்றம், ‘தமிழக அரசு, கேரள அரசு மற்றும் மத்திய அரசு சூழ்நிலைக்குத் தகுந்தது போல செயல்பட முடியவில்லை என்றால், இந்த விஷயத்தில் நாங்கள் ஒன்றும் செய்ய முடியாது. முல்லைப் பெரியாறு அணையின் நீர் அளவை நிர்வகிக்கும் கமிட்டி, இன்னும் 8 வாரத்தில் இறுதி முடிவு ஒன்றை எடுக்க வேண்டும். அதில், அணையின் நீர் அளவு எவ்வளவு இருக்கலாம் என்பதை முடிவு செய்து சொல்ல வேண்டும்’ என்று உத்தரவிட்டுள்ளது. 



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
.