This Article is From Mar 15, 2019

மும்பையில் நடை மேம்பாலம் இடிந்து விழுந்ததில் 6 பேர் உயிரிழப்பு! - 33 பேர் படுகாயம்!

Bridge Collapse in Mumbai: நடை மேம்பாலம் சத்ரபதி சிவாஜி ரயில் நிலையத்தின் பிளாட்பாரம் 1-யை, பி.டி. லேன் அமைந்திருக்கும் பகுதியுடன் இணைக்கிறது. இந்த நடைமேம்பாலத்தில்தான் விபத்து ஏற்பட்டிருக்கிறது.

விபத்து ஏற்பட்ட நடைமேம்பாலம்.

Mumbai:

மும்பையின் மையப்பகுதியான சத்ரபதி சிவாஜி மகராஜா ரயில் நிலையம் அருகே உள்ள நடை மேம்பாலம், இடிந்து விழுந்ததில் 6 பேர் உயிரிழந்தனர் 33 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். அந்த ஏற்கனவே நடைமேடை பழுதடைந்திருந்த போதிலும் மக்கள் பயன்பாட்டில் இருந்து வந்துள்ளது.

இந்நிலையில் நேற்று மாலை மிக பரபரப்பாக இயங்கும் நேரத்தில் சரியாக 7.30 மணி அளவில் இடிந்து விழுந்துள்ளது. இந்த விபத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்யுமாறு மாநில அரசுக்கு உத்தரவிட்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தமது இரங்கலை தெரிவித்துள்ளார்.

மும்பையின் மையப்பகுதியான சத்ரபதி சிவாஜி மகராஜா ரயில் நிலையத்தையும், ஆசாத் மைதான் காவல் நிலையத்தையும் இணைக்கும் நடை மேம்பாலம், பழுதாகி இருந்த நிலையில் நேற்று இரவு 7.30 மணியளவில் அதன் ஒரு பகுதி திடீரென இடிந்து விழுந்தது. பரபரப்பாக இயங்கும் நேரம் என்பதால், அலுவலகம் முடிந்து சாலையில் இருசக்கர வாகனங்களில் வீடு திரும்பிக் கொண்டிருந்தவர்கள் மீது அந்த பாலத்தின் உடைந்த பகுதி சுமார் 35 அடி உயரத்தில் இருந்து விழுந்தது.

இந்த விபத்தில் 3 பெண்கள் உள்பட 6 பேர் உயிரிழந்தனர். இடிபாடுகளில் சிக்கித் தவித்தவர்களை பல மணி நேரப் போராட்டத்திற்குப் பின்னர் மீட்புக் குழுவினர் மீட்டனர். இந்த மீட்பு பணியில் தேசிய பேரிடர் மீட்புக் குழுவினரும் இணைந்தனர். இதில் காயமடைந்த 10 பேர் ஜிடி மருத்துவனையிலும், 10 பேர் செயின்ட் ஜார்ஜ் மருத்துவனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து மகராஷ்டிரா அமைச்சர் வினோத் தாவ்டே கூறும்போது, விபத்துக்குள்ளான நடை மேம்பாலம் மேசாமான நிலையில் இல்லை என்றும் சிறிதாக ஏற்பட்ட பழுதுகளை சீரமைக்கும் பணிகளே நடந்துவந்தது. அதனால், தான் நடைமேடை மூடப்படாமல் மக்கள் பயன்பாட்டில் இருந்து வந்தது என்றும் தெரிவித்தார்.

மகராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் தனது டிவிட்டர் பதிவில், மும்பை டைம்ஸ் ஆப் இந்தியா கட்டிடம் அருகே நடந்த இந்த விபத்தை அறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன். இதுதொடர்பாக உடனடி மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள மும்பை போலீஸ் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த நடைமேம்பாலம், 1984ஆம் ஆண்டு கட்டப்பட்டதாகும். சத்ரபதி சிவாஜி ரயில் நிலையத்தின் பிளாட்பாரம் 1-யை, பி.டி. லேன் அமைந்திருக்கும் பகுதியுடன் இணைக்கிறது. விபத்து ஏற்பட்ட சமயம் பரபரப்பான மாலை நேரம் என்பதால், நீண்ட போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து வாகன ஓட்டிகளை மாற்றுபாதையில் செல்ல போலீசார் அறிவுறுத்தினர்.

நடைமேம்பாலத்தின் ஒரு பகுதி உடைந்து விழுந்து போது அதன் கீழ் பகுதி சாலையில் இருந்த சிக்னலில் சிவப்பு விளக்கு எரிந்ததால், உயிர் சேதம் குறைந்ததாக கூறப்படுகிறது. பாலம் கட்டப்பட்டு 35 ஆண்டுகளாகி பழுதான நிலையில் அதனை சரிப்படுத்தாமல் ரயில்வே நிர்வாகம் காட்டிய அலட்சியம் தான் விபத்துக்கு காரணம் என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

.