கடந்த சில வருடங்களாகவே அந்த பெண் மனஅழுத்தத்தில் இருந்து வந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். (Representational)
Mumbai: மோசடியில் ஈடுபட்டுள்ள பஞ்சாப் - மகாராஷ்டிர கூட்டுறவு (PMC) வங்கியியில் கணக்கு வைத்திருக்கும் பெண் மருத்துவர் ஒருவர் தனது வீட்டிலே தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக, மும்பையைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் பஞ்சாப்-மகாராஷ்டிர கூட்டுறவு வங்கியிடம் வீட்டு வசதி மற்றும் உள்கட்டமைப்பு லிமிடெட் நிறுவனம் (ஹெச்டிஐஎல்) ரூ.4,355 கோடி அளவுக்கு கடன் வாங்கியது. ஆனால், அதனைத் திருப்பிச் செலுத்தவில்லை. அந்த நிறுவனத்துக்கு உடந்தையாக இருந்த வங்கி அதிகாரிகள், கடன் விவரத்தை ரிசர்வ் வங்கியிடமிருந்து மறைத்து விட்டனர்.
இந்நிலையில், ரிசர்வ் வங்கியின் கண்காணிப்பின்போது, இந்த மோசடி வெளிச்சத்துக்கு வந்தது. இதுதொடர்பான புகாரின்பேரில் மும்பை காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது. இதனிடையே பிஎம்சி வங்கி முறைகேடால் அதில் டெபாசிட் செய்திருந்த வாடிக்கையாளர்கள் தங்களது பணத்தை எடுப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து, நேற்று முன்தினம் பிஎம்சி வங்கியில் டெபாசிட் செய்திருந்த வாடிக்கையாளர்கள் அனைவரும் மும்பை நீதிமன்றம் முன்பாக, போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் கலந்துகொண்டு வீடு திரும்பிய சஞ்சய் குலாத்தி (51) என்பவர் மாரடைப்பு ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார்.
ஜெட் ஏர்வேஸில் பணிபுரிந்து வந்த சஞ்சய் அந்நிறுவனத்தில் ஏற்பட்ட நெருக்கடி காரணமாக வேலையை இழந்துள்ளார். இதைத்தொடர்ந்து, தனது கையில் இருந்த மொத்த சேமிப்பையும், பிஎம்சி வங்கியில் டெபாசிட் செய்து வைத்துள்ளார். அப்படி இருக்கும் போது, பணத்தை எடுப்பதில் சிக்கல் ஏற்பட்டதால், மன அழுத்தத்தில் காணப்பட்டுள்ளார்.
இந்நிலையில், பிஎம்சி வங்கியில் கணக்கு வைத்துள்ள நிவேதிதா பிஜ்லானி (39) என்ற பெண் மருத்துவர் நேற்றைய தினம் தனது வீட்டில் அதிக டோஸ் கொண்ட தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
எனினும், அவரது தற்கொலைக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. அவர் பிஎம்சி வங்கியில் கணக்கு வைத்திருக்கிறார். இருப்பினும் அவரது தற்கொலைக்கு வங்கி மோசடி காரணமாக இருக்காது என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
மேலும் போலீசார் கூறும்போது, கடந்த சில வருடங்களாகவே அந்த பெண் மருத்துவர் மனஅழுத்தத்தில் இருந்து வந்துள்ளார். ஏற்கனவே கடந்த வருடம் மார்ச் மாதம் அவர் அமெரிக்காவில் இருந்த போது தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார்.
அமெரிக்காவில் மருத்துவ பயிற்சி மேற்கொண்டு வரும் அவருக்கு, முதல் திருமணத்தில் பிறந்த 17 வயது மகளும், 2வது திருமணத்தில் பிறந்த ஒன்றரை வயது ஆண் குழந்தையும் உள்ளது.