Mumbai: மும்பையில் கடந்த மாதம் 14 ஆம் தேதி உபர் காரில் சென்று கொண்டிருந்த தன்சிலா ஷேக் என்ற 35 வயதுப் பெண், விபத்தில் சிக்கி உயிரிழந்தார். ஆனால், அவரின் இறப்பை வைத்து இன்னும் அவரது குடும்பம் அலைக்கழிக்கப்பட்டு வருகிறது.
மும்பையில் இருக்கும் விப்ரோ நிறுவனத்தில் மென்பொருள் பொறியாளராக பணி செய்து வருபவர் தன்சிலா ஷேக். கடந்த மாதம் 14 ஆம் தேதி கோரிகன் பகுதியில் நடந்த ஒரு அலுவலக மீட்டிங்கிற்கு உபர் கார் புக் செய்து சென்றுள்ளார். அப்படி செல்லும் போது, காரின் டிரைவர் வண்டியை வேகமாக செலுத்தியதால், எதிர்பாராத விதமாக குப்பை கொட்டும் வேனில் மோதியது. இதனால், சம்பவ இடத்திலேயே தன்சிலா இறந்தார். காரின் டிரைவர் அதிர்ஷ்டவசமாக காயங்களுடன் உயிர் பிழைத்துக் கொண்டார்.
அவர் இறந்து சில நாட்கள் கழித்து உள்ளூர் போலீஸ் தன்சிலாவின் கணவர் முசமில் ஷேக் அவர்களை தொடர்பு கொண்டு, ‘இதைப் போன்ற விபத்துகளுக்கு காப்பீட்டுத் தொகை வழங்கப்படும். உங்களைத் தேடி ஒரு வக்கீல் வருவார். அவர் இது குறித்து அனைத்து நடவடிக்கைகளையும் பார்த்துக் கொள்வார்’ என்று தெரிவித்தது. இதையடுத்து அவர்களைப் பார்க்க சம்மதம் தெரிவித்திருக்கிறார் முசமில். ஆனால், அவர்கள் காப்பீட்டுத் தொகையில் 25 சதவிகிதத்தை கமிஷனாக கேட்டுள்ளனர்.
இதுமட்டுமல்லாமல், உபர் ஆப் மூலம் தன்சிலாவின் பேடிம் கணக்கிலிருந்து 568.10 ரூபாயை எடுக்கப்பட்டுள்ளது முசமிலுக்குத் தெரிய வந்துள்ளது.
முசமிலுக்கு, மனைவி குறித்தான பிரேத பரிசோதனை முடிவு இன்னும் துக்கத்தைக் கொடுத்தது. ‘மூளையில் ஒரு கூறான பொருள் குத்தியதால் விபத்தின் போது தன்சிலா உடனடியா உயிரிழந்துள்ளார். அவருக்கு ஷாக் ஏற்பட்டதன் விலைவாக கண்கள் சுருங்கியுள்ளது’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த திடுக்கிடும் சம்பவம் குறித்து முசமில், ‘கடைசியாக என் மனைவி என்னிடம், மீட்டிங்கிற்கு போனால் சொல்கிறேன் என்று சொன்னார். ஆனால், விபத்து குறித்து தான் எனக்கு தகவல் வந்தது. போய் பார்த்தால் ரத்த வெள்ளத்தில் என் மனைவி கிடந்துள்ளார். பிரேத பரிசோதனையில் அவருக்கு கடைசி நிமிடத்தில் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்படியென்றால், கார் வேகமாக சென்றுள்ளது என்று தானே அர்த்தம். முடிவே பெறாத ஒரு சவாரிக்கு உபர் நிறுவனம் பணம் எடுத்துள்ளது. இந்த விபத்துக்குக் காரணமான உபர் டிரைவர் அடுத்த நாளே பெயில் மூலம் வெளியே வந்துள்ளார். இதுவெல்லாம் போதாதென்று, காப்பீட்டுத் தொகைக்காக இன்னும் என்னை நச்சரித்துக் கொண்டிருக்கின்றனர். இன்னும் என் மகன் தன்சில் மொபைல் எண்ணுக்கு தினமும் கால் செய்து கொண்டிருக்கிறான். ஒருநாள் அவன் அம்மா திரும்பி வந்துவிடுவாள் என்று அவன் நம்புகிறான். அவனிடம், தன்சிலின் மரணம் குறித்து சொல்லக் கூடிய நிலைமையில் நாங்கள் இல்லை’ என்று அடுக்கடுக்காக புலம்பினார்.
ஆனால் இந்த விவகாரம் குறித்து உபர், ‘இந்த சம்பவம் மிகுந்த துக்கத்தை ஏற்படுத்துகிறது. இது குறித்து தெரிந்த உடனேயே சம்பந்தப்பட்ட டிரைவர் மீது உரிய நடவடிக்கை எடுத்துவிட்டோம். மேலும், போலீஸ் நடத்தி வரும் விசாரணைக்கும் நாங்கள் முழு ஒத்துழைப்புக் கொடுத்து வருகிறோம்’ என்று கூறியுள்ளது.
ஒரு மாதம் கழித்தும், உயிரிழப்பை வைத்து பணம் பார்க்க நினைக்கும் இந்த சம்பவம் மும்பையில் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
(हेडलाइन के अलावा, इस खबर को एनडीटीवी टीम ने संपादित नहीं किया है, यह सिंडीकेट फीड से सीधे प्रकाशित की गई है।)