This Article is From Aug 22, 2018

‘பதற்றமடைய வேண்டாம்!’- மும்பை தீ விபத்தில் குடும்பத்தைக் காப்பாற்றிய சிறுமி

தெற்கு மும்பையில் இன்று காலை அடுக்குமாடி கட்டடம் ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டது

Mumbai:

தெற்கு மும்பையில் இன்று காலை அடுக்குமாடி கட்டடம் ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் இதுவரை 4 பேர் இறந்துள்ளதாகவும், 16 பேர் காயமடைந்துள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தீ விபத்தில் தன்னையும் தன் குடும்பத்தையும் சாமர்த்தியமாக ஒரு சிறுமி காப்பாற்றியுள்ளார். 

10 வயது சிறுமியான அவர் தீ விபத்திலிருந்து தப்பித்தது குறித்து, ‘நான் என் குடும்பத்தில் இருப்பவர்கள் அனைவரிடத்திலும் யாரும் பதற்றப்பட வேண்டாம் என்று தெரிவித்தேன். பின்னர், நீரில் நனைத்த துணியை முகத்தைச் சுற்றி கட்டுமாறு கூறினேன். அப்படி கட்டுவதன் மூலம் சுவாதிச்சல் சீராக இருக்கும் என்றும் கூறினேன்’ என்று தெரிவித்துள்ளார். பின்னர் அவர் மற்றவர்களை பத்திரமாக கட்டடத்துக்கு வெளியே அழைத்து வந்துள்ளார். சமீபத்தில் தான், அந்தச் சிறுமிக்கு தீ விபத்திலிருந்து எப்படி தப்பிப்பது என்பது குறித்து பள்ளியில் பாடம் எடுக்கப்பட்டுள்ளது. அந்த அனுபவத்தை வைத்துத்தான் சிறுமி சாமர்த்தியமாக நடந்து தன்னையும் தன் குடும்பத்தையும் காப்பாற்றியுள்ளார். அவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

கிரிஸ்டல் டவர் என்ற அந்த அடுக்குமாடி கட்டடத்திலிருந்து பல மணி நேரம் தொடர்ந்து புகை வந்துள்ளது. மும்பையின் பரேலுக்கு அருகில் இருக்கும் ஹிந்த்மாதா திரையரங்கம் பக்கத்தில் கிரிஸ்டல் டவர் கட்டடம் இருக்கிறது. இது லெவல்-2 தீ விபத்து என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தீ விபத்து குறித்து கட்டுபாட்டு அறைக்கு காலை 8:32 மணிக்கு அழைப்பு வந்தது என்று ஒரு அதிகாரி கூறியுள்ளார். 17 மாடிகள் கொண்ட கட்டடத்தின் 12வது தளத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. இதையடுத்து, அடுத்தடுத்த மாடிகளுக்கு தீ பரவியுள்ளது. தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.  

.