This Article is From Jul 04, 2020

மும்பையில் அடுத்த 24 மணி நேரத்தில் மிக கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் ரெட் அலர்ட்!

அடுத்த 24 மணி நேரத்தில் பால்கார், மும்பை, தானே மற்றும் ரைகாட் உள்ளிட்ட பல மாவட்டங்களில் அதிகனமழை பெய்ய உள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

மும்பையில் அடுத்த 24 மணி நேரத்தில் மிக கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் ரெட் அலர்ட்!

ஹைலைட்ஸ்

  • மும்பையில் அடுத்த 24 மணி நேரத்தில் மிக கனமழைக்கு வாய்ப்பு
  • வானிலை மையம் ரெட் அலர்ட் விடுத்து எச்சரிக்கை
  • பல மாவட்டங்களில் அதிகனமழை பெய்ய உள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
New Delhi:

மகாராஷ்டிராவில் மும்பை, ரைகாட் மற்றும் ரத்னகிரியில் மிக கனமழை வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் பால்கார், மும்பை, தானே மற்றும் ரைகாட் உள்ளிட்ட பல மாவட்டங்களில் அதிகனமழை பெய்ய உள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

முன்னதாக, இந்திய வானிலை ஆய்வு மையம் கூறும்போது, பெருநகரங்கள் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் இடைவிடாது மிதமான முதல் கனமழை பெய்யக்கூடும் என்றும், தனிமைப்படுத்தப்பட்ட இடங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் தெரிவித்திருந்தது. 

இதுதொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மைய அதிகாரி ஒருவர் கூறும்போது, அடுத்த 24 மணி நேரம், அதாவது ஜூலை 3 முதல் 4ம் தேதி வரை, மும்பை, ராய்காட் மற்றும் ரத்னகிரிக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. சில இடங்களில், மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது ”என்று அவர் தெரிவித்தார்.

மேலும், "ஜூலை 4 ஆம் தேதி, பால்கர், மும்பை, தானே மற்றும் ராய்காட் மாவட்டங்களில் பல இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சில இடங்களில் அதிகனமழை பெய்ய வாய்ப்புள்ளது" என்றும் அவர் கூறினார்.

வானிலை ஆய்வு எச்சிரிக்கையை கருத்தில் கொண்டு, மும்பையின் குடிமை அமைப்பான பிரஹன் மும்பை மாநகராட்சி, பொதுமக்களுக்கு செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை குறித்து பகிர்ந்துள்ளது.

நேற்றைய தினம் பருவமழைக் காலத்தின் முதல் மழை பெய்தது. தென் மும்பையில் அதிகபட்ச மழை பெய்தது, அங்கு கொலாபாவில் 22 செ.மீ பதிவாகியுள்ளது, இதில் கடந்த மூன்று மணி நேரத்தில் மட்டும் 15 செ.மீ பதிவாகியுள்ளது.

மும்பை மற்றும் அதை ஒட்டிய கடலோர மாவட்டங்களில் தனிமைப்படுத்தப்பட்ட இடங்களில் கனமழை முதல் அதி கனமழை பெய்யும் என்று வானிலை துறை கணித்துள்ளது, மேலும் வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்தது.

மும்பை காவல்துறையினர் குடிமக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என்றும் அறிவுறுத்தியுள்ளனர் என்று அதன் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிட்டத்தட்ட ஒவ்வொரு பருவமழையிலும், மழையால் ஏற்படும் குழப்பத்தை சமாளிக்க மும்பை போராடுகிறது. புறநகர் ரயில்கள் - நகரின் உயிர்நாடி - பாதிக்கப்பட்டு, தாழ்வான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்குகின்றன.

.