This Article is From Jul 09, 2018

மும்பையில் தொடரும் கனமழை… பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை!

மும்பையில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், இந்த கனமழை நேற்றிலிருந்து இன்னும் தீவிரமடைந்துள்ளது

Mumbai:

மும்பையில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், இந்த கனமழை நேற்றிலிருந்து இன்னும் தீவிரமடைந்துள்ளது. இதனால், இன்று அங்குள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 

மும்பையில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, உள்ளூர் மின்சார ரயில்கள் சில ரத்து செய்யப்பட்டுள்ளன. நீர் மூழ்கிய தடத்தில் தான் சில ரயில்கள் மெதுவாக சென்று வருகின்றன. தாதர், சியோன், பரேல், குர்லா, வித்யாவிஹார், அந்தேரி, மாலத் மற்றும் ஜோதேஷ்வரி மும்பை புறநகர் பகுதிகள் மழையால் வெள்ளக்காடாக மாறியுள்ளது. பெரும்பாலான மும்பை சாலைகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுகின்றன.

மும்பை விமானநிலையத்திலும் ‘பார்க்கும் திறன்’ மிகவும் குறைவாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இதுவரை எந்த விமானங்களும் ரத்து செய்யப்படவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது. 

கடந்த 72 மணி நேரத்தில் மட்டும் மும்பையில் கனமழை காரணமாக 7 பேர் உயிரிழந்துள்ளனர். தொடர்ந்து அடுத்த சில நாட்களுக்கு கனமழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மும்பையின், கொலாபா பகுதியில் கடந்த 24 மணி நேரத்தில் 170.6 மி.மீ மழை பெய்துள்ளதாக அளவிடப்பட்டுள்ளது.

‘மும்பையில் நேற்று நல்ல மழை பெய்தது. நேரம் ஆக ஆக மழையின் வீரியம் கூடிக் கொண்டே போனது. மும்பைக்குப் பக்கத்தில் இருக்கும் மாவட்டங்களான பல்கார், ரெய்காட்டில் மும்பையை விட அதிக மழை பெய்துள்ளது’ என்ற வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.


 

.