கமலா மில்ஸ் வளாகத்தில் உள்ள கட்டிடம் ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டிருக்கிறது.
Mumbai: மும்பையில் புதிதாக கட்டப்பட்டுக் கொண்டிருக்கும் கட்டிடம் ஒன்றில் இன்று காலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த கட்டிடம் கமலா மில்ஸ் வளாகத்தில் அமைந்திருக்கிறது. தீயை அணைப்பதற்காக 5 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டிடம் என்பதால் அங்கு ஆட்கள் ஏதும் இல்லை என்றும், இதனால் உயிரிழப்புகள் ஏதும் ஏற்படவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த ஆண்டு டிசம்பர் 29-ம்தேதி கமலா மில்ஸில் உள்ள உணவு விடுதியில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் 14 பேர் உயிரிழந்தனர். நடப்பாண்டில் டிசம்பர் மாதத்தில் மட்டும் மிகப்பெரும் அளவில் தீ விபத்துகள் மும்பையில் ஏற்பட்டிருக்கின்றன.
3 தீவிபத்து சம்பவங்கள் நடந்திருப்பது அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது. வியாழன் அன்று செம்பூர் பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி முதியவர்கள் 5 பேர் உயிரிழந்தனர். அதே நாளில் பண்டி பஜாரில் தீ விபத்து ஏற்பட்டது.
டிசம்பர் 17-ம்தேதி அந்தேரியில் அரசு மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 10 பேர் உயிரிழந்தனர். தீயணைப்பு துறையின் என்.ஓ.சி. எனப்படும் தடையில்லா சான்றிதழை அந்தேரி அரசு மருத்துவமனை பெறாமல் இருந்தது.