This Article is From Apr 04, 2020

மும்பை தாஜ் ஓட்டலில் மருத்துவ பணியாளர்கள் இலவசமாக தங்க ஏற்பாடு! வாரி வழங்கும் டாடா!!

கொரோனா நிவாரண மற்றும் மீட்பு நிதியாக டாடா குழுமத்தின் டாடா அறக்கட்டளை ஏற்கனவே ரூ. 1,500 கோடியை வழங்கியுள்ளது. தற்போது சொகுசு ஓட்டல்களில் மருத்துவ பணியாளர்கள் இலவசமாக தங்கிக் கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மும்பை தாஜ் ஓட்டலில் மருத்துவ பணியாளர்கள் இலவசமாக தங்க ஏற்பாடு! வாரி வழங்கும் டாடா!!

பிரபல தாஜ் ஓட்டலை டாடா குழுமம் நிர்வகித்து வருகிறது.

ஹைலைட்ஸ்

  • கொரோனா நிவாரண நிதியாக ரூ. 1,500 கோடியை டாடா வழங்கியுள்ளது
  • தாஜ் ஓட்டல்களில் மருத்துவ பணியாளர்கள் தங்கிக்கொள்ள அனுமதி
  • டாடா குழுமத்திற்கு சமூக வலைதளங்களில் பாராட்டு குவிகிறது
New Delhi:

மகாராஷ்டிராவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை நாட்டிலேயே அதிகமாக உள்ள நிலையில், அங்கு மருத்துவ பணியாளர்கள் பிரபல தாஜ் ஓட்டலில் கட்டணமின்றி தங்கிக்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை ஓட்டல்களை நிர்வகிக்கும் டாடா குழுமம் வெளியிட்டுள்ளது. 


உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவில் செயல்படும் தாஜ் ஓட்டலிலும் மருத்துவ பணியாளர்கள் இலவசமாக தங்கிக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது-


கொரோனா பரவிவரும் இந்த நெருக்கடியான சூழலில் சமூகத்திற்கு நாங்கள் செய்ய வேண்டிய கடமைகளை உணர்கிறோம். எங்களது பொறுப்புணர்வின் வெளிப்பாடாக, கொரோனாவுக்கு எதிராக போராடும் மருத்துவ பணியாளர்கள் தாஜ் ஓட்டல்களில் தங்கிக்கொள்ள ஏற்பாடு செய்துள்ளோம்.


தாஜ் மஹால் பேலஸ், தாஜ் லேண்ட்ஸ் எண்ட், தாஜ் சான்டாக்ரூஸ், தி பிரசிடென்ட், ஜிஞ்சர் எம்.ஐ.டி.சி. அந்தேரி, ஜிஞ்சுர் மட்கான் மற்றும் ஜிஞ்சர் நொய்டா ஆகிய 7 ஓட்டல்களில் மருத்துவ பணியாளர்கள் தங்கிக் கொள்ளலாம்.


இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் வாடகை வீடுகளில் தங்கியிருக்கும் மருத்துவ பணியாளர்கள் வீட்டு உரிமையாளர்களால் துன்புறுத்தப்படுவதாக புகார்கள் வெளிவந்தன. இந்த நிலையில் மருத்துவ பணியாளர்கள் தங்கிக்கொள்ள டாடா குழுமம் ஏற்பாடு செய்துள்ளது. இதனை பலரும் பாராட்டி வருகின்றனர்.
 

நாடாளுமன்ற உறுப்பினரும், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவருமான சுப்ரியா சூலே தனது ட்விட்டர் பதிவில், 'மும்பையில் பணியாற்றும் மருத்துவர்கள், நர்ஸ்கள் போன்ற பணியாளர்கள் தங்கிக்கொள்ள தாஜ் ஓட்டலை டாடா குழுமம் ஏற்பாடு செய்துள்ளது. இதற்காக டாடா குழுமத் தலைவர் ரத்தன் டாடாவுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்' என்று கூறியுள்ளார்.

இதேபோன்று தொழில் அதிபர் ஹர்ஷ் கோயங்காவும் டாடா குழுமத்தை பாராட்டியுள்ளார். 
 

கொரோனா தடுப்பு மற்றும் நிவாரண பணிகளுக்காக டாடா குழுமம் ரூ. 500 கோடியை வழங்குவதாக அறிவித்தது. இதைத் தொடர்ந்து கூடுதலாக ரூ. 1,000 கோடியை வழங்குவதாக டாடா அறிவிப்பை வெளியிட்டது. 

.