மற்றொரு போலீஸ் எஸ்.ஐ. பாலகிருஷ்ணன் உள்பட 6 பேர் மீது சிபிசிஐடி போலீசார் கொலை வழக்கை பதிவு செய்துள்ளனர்.
ஹைலைட்ஸ்
- ஜெயராஜ் - பென்னிக்ஸ் உயிரிழந்தது கொலை வழக்காக பதிவு செய்யப்பட்டுள்ளது
- போலீஸ் எஸ்.ஐ. ரகு கணேஷ் சிபிசிஐடி போலீசாரால் கைதாகியுள்ளார்
- தலைமறைவாக உள்ளவர்களை பிடிக்க தனிப்படை அமைப்பு
Chennai: தூத்துக்குடி மாவட்டம் சாத்தான் குளம் தந்தை – மகன் மரண வழக்கில் சம்மந்தப்பட்ட போலீஸார் அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். முதல் தகவல் அறிக்கையில், தந்தை – மகன் உயிரிழந்தது கொலை வழக்காக பதிவு செய்யப்பட்டுள்ளது.
போலீஸ் எஸ்.ஐ. பால கிருஷ்ணன், ரகு கணேஷ், காவலர்கள் முருகன், முத்துராஜ் உள்ளிட்ட 6 பேர் மீது சிபிசிஐடி போலீசார் கொலை வழக்கு பதிவு செய்திருந்தனர். இதைத்தொடர்ந்து, ஆய்வாளர் ஸ்ரீதர், துணை ஆய்வாளர்கள் ரகு கணேஷ் மற்றும் பாலகிருஷ்ணன் மற்றும் கான்ஸ்டபிள் முருகன் ஆகியோர் தமிழகத்தின் சிபிசிஐடி குற்றப்பிரிவால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சாத்தான்குளம் சம்பவத்தில் போலீசார் ஏற்கனவே பதிவு செய்திருந்த முதல் தகவல் அறிக்கை திருத்தம் செய்யப்பட்டு, கொலை வழக்காக ஐ.பி.சி. பிரிவு 302 சேர்க்கப்பட்டுள்ளது.
5 டி.எஸ்.பி.க்கள் மற்றும் 10 இன்ஸ்பெக்டர்கள் அடங்கிய சிறப்பு குழு வழக்கை விசாரித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான் குளத்தில் கடந்த 19-ம்தேதி, செல்போன் கடை நடத்தி வரும் ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் போலீசாரால் கைது செய்யப்பட்டு அழைத்துச் செல்லப்பட்டனர். படு காயங்களுடன் கோவில்பட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர்கள் ஜூன் 23-ம்தேதி உயிரிழந்தனர்.
காவல் நிலையத்தில் வைத்து இருவரும் போலீசாரால் சித்ரவதை செய்யப்பட்டதால் படுகாயம் அடைந்து இருவரும் உயிரிழந்திருக்கலாம் என குற்றச்சாட்டு எழுந்தது. இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட போலீசார் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வருகிறார்கள்.
சிபிஐ இந்த வழக்கை விசாரிப்பதற்கு தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது. சிபிஐ வழக்கை எடுக்கும் முன்பாக சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்துவதற்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டிருந்தது.
அதன் அடிப்படையில், விசாரணை மேற்கொண்டு வந்த சிபிசிஐடி போலீசார், நேற்று முதல் இந்த வழக்கில் சம்மந்தப்பட்ட அனைத்து போலீசாரையும் கைது செய்துள்ளனர். இதில், 6 பேர் மீது சிபிசிஐடி போலீசார் கொலை வழக்கை பதிவு செய்துள்ளனர்.
தொடர்ந்து, தந்தை – மகன் மரணத்தில் தொடர்புடையதாக குற்றம் சாட்டப்படும் பிரெண்ட்ஸ் ஆஃப் போலீஸை சேர்ந்த இளைஞர்கள் தலைமறைவாக இருப்பதாகவும், அவர்களை பிடிப்பதற்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.