கடந்த ஜூலை மாதம் மறைந்த காங்கிரஸ் நிர்வாகி, ஜெய்பால் ரெட்டிக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில்தான் ஜோஷி இப்படி பேசியுள்ளார்.
ஹைலைட்ஸ்
- பாஜக-வின் முரளி மனோகர் ஜோஷிதான் இக்கருத்தைத் தெரிவித்துள்ளார்
- கட்சி தாண்டிய விவாதங்களும் அவசியம்: ஜோஷி
- பாஜக தலைமைக்கு எதிராகவும் ஜோஷி தொடர்ந்து கருத்து கூறிவருகிறார்
New Delhi: பாஜக-வின் மூத்த தலைவர்களில் ஒருவரான முரளி மனோகர் ஜோஷி, “பிரதமர் மோடிக்கு முன்னால் தைரியமாக மனதில் பட்டதைப் பேசும் தலைவர்கள் இந்தியாவுக்குத் தேவை” என்று பரபரப்புக் கருத்தைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும், தேசிய மற்றும் சர்வதேச பிரச்னைகளை கட்சி தாண்டி விவாதிக்கும் சூழல் இருப்பதில்லை. அது மீண்டும் ஊக்குவிக்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளார்.
கடந்த ஜூலை மாதம் மறைந்த காங்கிரஸ் நிர்வாகி, ஜெய்பால் ரெட்டிக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில்தான் ஜோஷி இப்படி பேசியுள்ளார்.
“இன்றைய காலக்கட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக மனதில் பட்டதைப் பேசும், தைரியமாக விவாதம் செய்யும் தலைவர்கள் அவசியம் என்று நினைக்கிறேன். மோடி, சந்தோஷப்படுவாரா, வருத்தப்படுவாரா என்பதையெல்லாம் பொருட்படுத்தாமல் எந்தவித தயக்கமுமின்றி பேசுபவர்கள் அவசியம்” என்று நிகழ்ச்சியில் பேசிய ஜோஷியின் கருத்து டெல்லி அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாஜக-வின் தற்போதைய தலைமைக்கு எதிராக தொடர்ந்து கருத்து தெரிவித்து வருபவர் முன்னாள் மத்திய அமைச்சரான ஜோஷி. குறிப்பாக, தனக்கு நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்கப்படாதது குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். மோடி - அமித்ஷா கூட்டணி, பாஜக-வின் மையமாக மாறியதைத் தொடர்ந்து அத்வானி - ஜோஷி கூட்டணி கட்சி அதிகாரத்தில் இருந்து ஓரங்கட்டப்பட்டது.
ஜோஷி, நிகழ்ச்சியில் பேசும்போது துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்டோர் அமர்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது.