This Article is From Nov 29, 2018

"சர்கார் விவகாரம் : மன்னிப்பு கேட்க மாட்டேன்" - அரசுடன் மல்லுக்கட்டும் முருகதாஸ்

சர்கார் விவகாரம் தொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.

விஜய் நடித்த சர்கார் திரைப்படத்தில், தமிழக அரசின் நலத்திட்டங்களுக்கு எதிரான காட்சிகள் இருப்பதாக அதிமுகவினர் புகார் தெரிவித்து வந்தனர். இதன் தொடர்ச்சியாக சர்கார் திரைப்படம் திரையிடப்பட்ட திரையரங்குகள் முன்பாக போராட்டங்கள் நடத்தப்பட்டன.

பல இடங்களில் சர்கார் பேனர்கள் கிழிக்கப்பட்டதால் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பு காணப்பட்டது. இதையடுத்து சில காட்சிகள் நீக்கப்பட்டும், சில இடங்களில் சத்தமில்லாமல் திரைப்படம் எடிட் செய்யப்பட்டது. இதன்பின்னர் திரையிடுவது தொடர்பாக எந்த தடங்கலும் ஏற்படவில்லை.

இதற்கிடையே, கைது நடவடிக்கையை தவிர்ப்பதற்காக கடந்த 9-ம்தேதி இயக்குனர் முருகதாஸ் சென்னை உயர் நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கோரினார். வழக்கு விசாரணையின்போது, முருகதாஸ் இனிமேல் எடுக்கும் படங்களில் அரசின் திட்டங்களை விமர்சிக்கும் காட்சிகள் இடம்பெறக் கூடாது. இதுதொடர்பாக அவர் உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்று அரசு தரப்பில் வலியுறுத்தப்பட்டது.

இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, முருகதாஸ் தரப்பில், அரசின் திட்டங்களை விமர்சிப்பது போன்ற காட்சிகள் சர்கார் படத்தில் இடம்பெற்றிருந்ததற்காக மன்னிப்பு கோர முடியாது. அவ்வாறு மன்னிப்பு கேட்பது எனது கருத்து சுதந்திரத்திற்கு எதிரானது. கருத்துரிமை என்ற வகையில் எதிர்காலத்தில் விமர்சிக்க மாட்டேன் என்று எந்த உத்தரவாதமும் அளிக்க முடியாது என்று தெரிவிக்கப்பட்டது.


 

.