Ghaziabad: உத்தர பிரதேச மாநில காஸியாபாத்தில் இருக்கும் நீதிமன்றத்தில் 25 வயது முஸ்லீம் இளைஞர் இந்துப் பெண் ஒருவரை மணமுடிக்க சென்றுள்ளார். அப்போது வலதுசாரி அமைப்பைச் சேர்ந்த கும்பல் அவரை சரமாரியாக தாக்கியுள்ளது.
போபாலைச் சேர்ந்த அந்த முஸ்லீம் இளைஞரும், அவர் மணமுடிக்க இருந்த உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த இந்துப் பெண்ணும், நொய்டாவில் ஒரே நிறுவனத்தில் வேலை பார்க்கும் போது காதல் வயப்பட்டுள்ளனர். அவர்கள் இருவரும் நேற்று திருமணத்தைப் பதிவு செய்யும் நோக்கில், காஸியாபாத் நீதிமன்றத்துக்குச் சென்றுள்ளனர்.
அப்போது அவரை 7 பேர் கொண்ட கும்பல் தரதரவென நீதிமன்ற வளாகத்திலிருந்து இழுத்து வந்து தாக்கத் தொடங்குகிறது. பின்னர், சுற்றி இருந்த மக்கள் பலர் அந்த நபரை சரமாரியாக அடிக்கத் தொடங்குகின்றனர். சம்பவ இடத்துக்கு போலீஸ் வரும் வரை அந்த நபரை கும்பல் கண்மூடித்தனமாக தாக்கியது.
பின்னர் போலீஸ் இந்த சம்பவம் தொடர்பாக ஒரு வழக்கை பதிவு செய்தது. இது குறித்து போலீஸ் அதிகாரி சஞ்சய் பாண்டே, ‘நொய்டாவில் இருக்கும் ஒரு நிறுவனத்தில் பாதிக்கப்பட்ட நபர் பணி செய்து வருகிறார். அவர் நீதிமன்றத்துக்கு தனது திருமணத்தைப் பதிவு செய்யச் சென்றுள்ளார். அப்போது ஒரு கும்பல் திடீரென் அவரைத் தாக்கியுள்ளது. இது தொடர்பாக வினோத் மற்றும் நவ்நீத் என்ற இருவர் மீது நாங்கள் வழக்குப் பதிவு செய்துள்ளோம். ஆனால், இதுவரை எந்தக் கைது நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை’ என்று தகவல் தெரிவித்துள்ளார். நிலைமை இப்படி இருந்தும், அச்சுறுத்தலுக்கு பயந்து தன்னைத் தாக்கியவர்கள் மீது பாதிக்கப்பட்ட நபர் எந்தப் புகாரும் கொடுக்கவில்லை.
இந்த சம்பவம் தொடர்பான ஒரு திடுக்கிடும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.