லாடாக்கின் கிழக்கு பகுதியில், கால்வான் பள்ளத்தாக்கில் இந்தியா மற்றும் சீன ராணுவ வீரர்களுக்கிடையே நடைபெற்ற மோதலில் 20 இந்திய ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.
ஹைலைட்ஸ்
- இரு தரப்பு மோதலில் 20 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்
- சீனத் தரப்பிலும் 45 வீரர்கள் உயிரிழந்ததாக தகவல்
- சீனா, இதுவரை அதிகாரப்பூர்வமாக வீரர்கள் இறப்பு பற்றி தகவல் தெரிவிக்கவில்லை
New Delhi: லடாக் பகுதியில் உள்ள கால்வானில் இந்திய - சீன ராணுவத்தினர் மோதியதைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையில் உரசல் போக்கு நிலவி வந்தது. இதையடுத்து பேச்சுவார்த்தை மூலம் பிரச்னையை சுமூகமாக தீர்த்துக் கொள்ள இரு தரப்புகளும் முடிவெடுத்தன. இந்நிலையில் இந்திய மற்றும் சீன ராணுவத் தரப்புகள், அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து சீனக் கட்டுப்பாட்டில் இருக்கும் இடத்தில் பேச்சுவார்த்தை நடத்தின. அதில், ‘இரு நாட்டுத் தரப்புகளும் பிரச்னைக்குரிய இடங்களிலிருந்து விலகிச் செல்ல' முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வந்துள்ளது.
இது குறித்து இந்திய ராணுவத்துக்கு நெருக்கமான வட்டாரம், “ராணுவ ரீதியிலான பேச்சுவார்த்தையில் இரு தரப்புகளும் விலகிச் செல்வதென முடிவு எடுத்துள்ளன. இந்தப் பேச்சுவார்த்தையானது கட்டுக்கோப்பான மற்றும் நேர்மறையான ரீதியில் நடந்தது. கிழக்கு லடாக் பகுதியில் உரசல் போக்கு நிலவி வரும் அனைத்து இடங்கள் பற்றியும் விவாதிக்கப்பட்டது. இரு தரப்புகளும் பிரச்னைக்குரிய இடங்களிலிருந்து விலகிச் செல்வது என ஒப்புக் கொண்டன” என விளக்கமாக தெரிவித்துள்ளது.
சீனாவுக்கு உட்பட்ட இடமான கிழக்கு லடாக்கின் சுசுல் பகுதியில் லெஃப்டெனென்ட் ஜெனரல் லெவல் பேச்சுவார்த்தை நடந்துள்ளது.
கடந்த ஜூன் 15 ஆம் தேதி, லாடாக்கின் கிழக்கு பகுதியில், கால்வான் பள்ளத்தாக்கில் இந்தியா மற்றும் சீன ராணுவ வீரர்களுக்கிடையே நடைபெற்ற மோதலில் 20 இந்திய ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். 76 வீரர்களுக்குப் படுகாயம் ஏற்பட்டது. சீனத் தரப்பிலும் உயிர்ச்சேதம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டாலும் அந்நாடு அதிகாரப்பூர்வமாக எந்த தகவலையும் வெளியிடவில்லை.
ஜூன் 6 ஆம் தேதி இரு தரப்புகளும் ஒப்புக் கொண்டதை மீறி சீனத் தரப்பு பிரச்னைக்குரிய இடத்தில், அத்துமீறி டென்ட் போட்டதே மோதலுக்கு வழிவகுத்ததாக குற்றம் சாட்டப்படுகிறது. இந்த மோதலின் மோது கூர்மையான ஆயுதங்கள் கொண்டும், ஆணி பதித்த கட்டைகள் கொண்டும் சீன ராணுவத்தினர், இந்திய ராணுவத்தைத் தாக்கினர் என்று பகிரங்கமாக குற்றம் சாட்டப்படுகிறது. இந்த மோதலில் 45 சீன வீரர்களும் இறந்திருக்கக்கூடும் என்று தகவல்கள் வருகின்றன.
1967 ஆம் ஆண்டுக்குப் பின்னர் இரு நாட்டு ராணுவத்திற்கும் இடையில் நடக்கும் கொடூரமான மோதல் சம்பவமாக இது பார்க்கப்படுகிறது.