சிபிஐ தரப்பு வாதத்தை உச்ச நீதிமன்றம் ஏற்றுக் கொண்டுள்ளது.
New Delhi: நாட்டையே உலுக்கிய பீகார் காப்பக வழக்கில், கொல்லப்பட்டதாக கருதப்படும் 35 சிறுமிகள் உயிருடன் உள்ளனர் என்று உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ தகவல் தெரிவித்துள்ளது. இந்த தகவல், வழக்கில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. 2 ஆண்டுகளுக்கு முன்பாக பீகார் காப்பக வழக்கு நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
கடந்த ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்ற வாதத்தின்போது, காப்பகத்தை நடத்தி வந்த அரசியல்வாதி பிரஜேஷ் தாகூரும், அவரது உதவியாளர்களும் 11 சிறுமிகளை கொன்றுள்ளனர் என்று சிபிஐ பரபரப்பு அறிக்கையை தாக்கல் செய்திருந்தது. அந்த 11 சிறுமிகளின் எலும்புகள் குவியல் குவியலாக கண்டெடுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், விசாணையின்போது 2 மனித எலும்புகள் மீட்கப்பட்டதாகவும், அவை ஒரு முதிர்ச்சியடைந்த ஆண் மற்றும் பெண்ணின் எலும்புக்கூடு என்றும் சிபிஐ கூறியுள்ளது. சிறுமிகள் கொலை செய்யப்பட்டதற்கான ஆதாரம் ஏதும் கிடைக்கவில்லை என்று சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் சிபிஐ சார்பாக தலைமை வழக்கறிஞர் கே.கே. வேணுகோபால் ஆஜர் ஆனார். விசாரணையின்போது, கொல்லப்பட்டதாக நம்பப்பட்டு வரும் சிறுமிகள் உயிருடன் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் பீகாரில் உள்ள 17 காப்பகங்களில் விசாரணை நடத்தப்பட்டது. அவற்றில் 13 காப்பகங்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில் வழக்கு விசாரணை முடிந்து விட்டதாக கூறியுள்ள சிபிஐ, இதுதொடர்பாக உச்சநீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது. இதனை உச்ச நீதிமன்றம் ஏற்றுக் கொண்டுள்ளது.
அரசு நடத்திய காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த சிறுமிகள், மோசமான பாடல்களுக்கு நடனமாட கட்டாயப்படுத்தப்பட்டுள்ளனர் என்றும், அதிகாரிகள், அரசியல்வாதிகள் அவர்களை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் குற்றச்சாட்டு உள்ளது. சிபிஐ தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகையில் அரசியல்வாதி பிரஜேஷ் தாகூர் மீது முக்கிய குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக டாடா இன்ஸ்டிடியூட் ஆஃப் சோசியல் சைன்சஸ் நடத்திய சர்வேயின்போது பெரிதாக பேசப்பட்டது. காப்பக துன்புறுத்தல்கள் தொடர்பாக பத்திரிகையாளர் நிவேதிதா ஜா உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார். இந்த விவகாரத்தை நீதிமன்றம் கண்காணிக்கும், சுதந்திரமான விசாரணை அமைப்பு விசாரணை நடத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தார்.
இன்று மனுதாரர் தரப்பில் வாக்கறிஞர் சொயில் ஆலம் ஆஜராகி, காப்பகத்தில் கொலைகள் நடந்திருப்பதாக அங்கிருந்தவர்கள் வாக்கு மூலம் அளித்திருந்தனர். இதனை சிபிஐ அலட்சியமாக கருதியது என்று அவர் குற்றம் சாட்டினார்.
இந்த வழக்கு தொடர்பாக சுமார் ஒன்றரை ஆண்டுகள் சிபிஐ விசாரணை நடத்தியது. இதன் முவில், அரசு காப்பகங்களை சரிவர நிர்வகிக்காத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பீகார் முதல்வர் நிதிஷ் குமாரிடம் சிபிஐ பரிந்துரை செய்துள்ளது.
நிதிஷிடன் சிபிஐ அளித்துள்ள நடவடிக்கை எடுக்கப்பட வேண்டிய அதிகாரிகள் பட்டியல் 25 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் உள்பட 70 பேர் இடம் பெற்றுள்ளனர்.