வீடியோவில் தோன்றும் ஜெஃப், “கியூபாவில் இருந்து அமெரிக்கா வரும்போது, அவருக்கு வெறும் 16 வயதுதான்' என்கிறார்
San Francisco: அமேசான், ஆன்லைன் வணிக நிறுவனத்தின் நிறுவனரும் உலகின் நம்பர் 1 பணக்காரரும் ஆன ஜெஃப் பெசோஸின் தந்தை மைக் பெசோஸ், 16 வயதில் அமெரிக்காவுக்குத் தன்னந்தனியாக வந்துள்ளார். இது குறித்து ஜெஃப் ஒரு வீடியோ வெளியிட்டு உருகியுள்ளார்.
கியூபாவில் பிறந்த மைக் பெசோஸ், 1962 ஆம் ஆண்டு தன் எதிர்காலத்துக்காக அமெரிக்காவின் மியாமி மாகாணத்துக்கு வந்துள்ளார். அப்போது அவருக்கு கொஞ்சம் கொஞ்சம்தான் ஆங்கிலம் தெரிந்திருந்ததாம். ஆனால் தன், ‘அமெரிக்க கனவை' வாழ்வதற்கு ஆங்கிலம் மைக்கிற்குத் தடையாக இருந்திருக்கவில்லை.
தன் தந்தையின் வாழ்க்கையை கொண்டாடும் வகையில் ஜெஃப், ஒரு வீடியோவை உருவாக்கி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
வீடியோவில் தோன்றும் ஜெஃப், “கியூபாவில் இருந்து அமெரிக்கா வரும்போது, அவருக்கு வெறும் 16 வயதுதான். தனியாக வந்தது மட்டுமல்ல, ஸ்பானிஷ் மட்டுமே அவர் பேசினார். அவருடைய விடாப்படியான குணம், நம்பிக்கை முன்னுதரணமாக திகழ்கிறது.
என் தந்தையின் அமெரிக்கப் பயணம் என்பது, எப்படி மக்கள் ஒருவருக்கொருவர் உதவியாக இருக்கிறார்கள் என்பதை காட்டுகிறது. அவரை கொண்டாட எங்களுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.
என் தந்தையின் தாய், அமெரிக்காவில் அதிகம் குளிரும் என்று நினைத்துள்ளார். இதற்காக அவருக்கு, துடைக்க பயன்படுத்தும் துணிகளில் இருந்து கோட் போன்ற ஒன்றை செய்துள்ளார். அந்த ஆடையை இன்னும் நாங்கள் பத்திரமாக வைத்துள்ளோம்.
அவர் தன்னந்தனியாக அமெரிக்கா வந்ததை நினைத்துப் பார்த்தாலே திகிலாக இருக்கிறது. ஆனால் ஃபிடல் காஸ்ட்ரோவிடம் இருந்து அவரை காப்பாற்ற அமெரிக்கா அனுப்புவதுதான் சரியானது என்று அவரது பெற்றோர்கள் நினைத்திருக்கிறார்கள்” என்று நெகிழ்ந்தார்.
மைக் பெசோஸ், ஜெஃப் பெசோஸை பெற்றெடுத்தத் தந்தை அல்ல. ஜெஃப்பின் தாயான, ஜாக்லின் ஜிஸ், அவருக்கு 4 வயது இருக்கும்போது மைக் பெசோஸை திருமணம் செய்து கொண்டார்.
மைக், அமெரிக்காவுக்கு வந்தபோது, 3 ஷர்ட்கள், 3 பேன்ட்கள், 3 அண்டர்-வேர்கள் மற்றும் ஒரு ஜோடி ஷூ ஆகியவை மட்டுமே கொண்டு வந்தார்.