This Article is From Dec 14, 2019

'என் பெயர் ராகுல் சாவர்க்கர் அல்ல': மன்னிப்பு கேட்க முடியாதென ராகுல் காந்தி திட்டவட்டம்!!

"Rape in India" என்ற பேசியதற்கு ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பாஜக வலியுறுத்தி வரும் நிலையில், இந்த விவகாரத்தில் மன்னிப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை என்று ராகுல் காந்தி கூறி வருகிறார்.

'என் பெயர் ராகுல் காந்தி; ராகுல் சாவர்க்கர் அல்ல. நான் மன்னிப்பே கேட்க மாட்டேன்' என்று ராகுல் காந்தி கூறியுள்ளார்.

New Delhi:

"Rape in India"  விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தி வரும் நிலையில், இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரசின் ராகுல் காந்தி, தனது பெயர் ராகுல் சாவர்க்கர் அல்ல என்றும் எக்காரணத்தை கொண்டும் மன்னிப்பு கேட்க முடியாது என்றும் திட்டவட்டமாக கூறியுள்ளார். 

இதுதொடர்பாக டெல்லி ராம்லீலா மைதானத்தில் நடைபெற்ற பிரமாண்ட பேரணியில் ராகுல் காந்தி பேசியதாவது- 

என் பெயர் ஒன்றும் ராகுல் சாவர்க்கர் கிடையாது. நான் ராகுல் காந்தி. நான் மன்னிப்பெல்லாம் கேட்ட மாட்டேன். உண்மையை சொன்னதற்காக நான் மட்டுமல்ல. எந்தவொரு காங்கிரஸ் தொண்டனும் மன்னிப்பு கேட்கத்தேவையில்லை.

நான் பேரணியில் "Rape in india" என்று பேசியதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் பாஜக உறுப்பினர்கள் என்னை வலியுறுத்தினர். உண்மை பேசியதற்காக மன் மன்னிப்பு கேட்க வேண்டும் என வற்புறுத்தப்பட்டேன். 

இவ்வாறு அவர் கூறினார்.

ஜார்க்கண்டில் தேர்தல் பிரசாரம் தொடர்பான பொதுக்கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, 'நரேந்திர மோடி மேக் இன் இந்தியாவை உருவாக்குவதாக சொன்னார். ஆனால் தற்போது ரேப் இன் இந்தியாதான் உருவாகிக் கொண்டிருக்கிறது.' என்று பேசினார்.

அவரது கருத்து பாஜக தலைவர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. ராகுல் காந்தியை பாஜக நிர்வாகிகள் கண்டித்து வருகின்றனர். இது தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. 

மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, 'இந்திய வரலாற்றில் முதன்முறையாக இந்திய பெண்கள் பலாத்காரம் செய்ய வேண்டும் என்று அழைப்பு விடுக்கிறார். இதுதான் நாட்டு மக்களுக்கு ராகுல் காந்தி சொல்லும் செய்தியா?. அவர் நிச்சயமாக தண்டிக்கப்பட வேண்டும்' என்று கேள்வி எழுப்பியுள்ளார். 

.