This Article is From May 15, 2019

'நான் சொன்னது சரித்திர உண்மை!' - கண்டனம், விமர்சனங்களுக்கு கமல் பதிலடி!!

சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஓர் இந்து என்று அரவக்குறிச்சி இடைத்தேர்தல் பிரசார களத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல் பேசினார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.

'நான் சொன்னது சரித்திர உண்மை!' - கண்டனம், விமர்சனங்களுக்கு கமல் பதிலடி!!

சர்ச்சைகளுக்கு திருப்பரங்குன்றம் தேர்தல் பிரசாரத்தில் கமல் பதில் அளித்துள்ளார்.

'நான் சொன்னது சரித்திர உண்மை. நான் யாரையும் சண்டைக்கு இழுக்கவில்லை. எனது பேச்சை முழுவதுமாக கேட்காமல், அதன் நுனியை கத்தரித்து போட்டுள்ளார்கள்.' என்று தன்மீதான விமர்சனம், கண்டனங்கள் குறித்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல் பதில் அளித்துள்ளார். 

சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஓர் இந்து என்று நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் தெரிவித்தது நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த விவகாரம் மோடி வரைக்கும் சென்ற நிலையில், இந்துக்கள் தீவிரவாதிகளாக இருக்க முடியாது. தீவிரவாதிகளாக இருப்பவர்கள் இந்துக்களாக இருக்க முடியாது என்று கூறியிருந்தார். 

இந்த நிலையில், திருப்பரங்குன்றம் தேர்தல் பிரசாரத்தில் பேசிய கமல், தன்மீதான விமர்சனங்களுக்கு பதில் அளித்துள்ளார். 'நான் சொன்னது சரித்திர உண்மை. நான் யாரையும் சண்டைக்கு இழுக்கவில்லை. எனது பேச்சை முழுவதுமாக கேட்காமல், அதன் நுனியை கத்தரித்து போட்டுள்ளார்கள்'  என்று கமல் பேசினார். 

திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் பிரசாரத்தில் தோப்பூர் பகுதியில் கமல் பேசியதாவது-

நான் சொன்னது சரித்திர உண்மை. நான் யாரையும் சண்டைக்கு இழுக்கவில்லை. என் மீதான விமர்சனங்களுக்கு எனது பேச்சை கத்தரித்து வெளியிட்ட ஊடக நண்பர்களும் பொறுப்பேற்க வேண்டும். 

வாலையும், தலையையும் வெட்டி விட்டால் யார் வேண்டுமானாலும் யாரை வேண்டுமானாலும் திட்டியது போன்று மாற்றி விடலாம். ஏதேதோ ஐ.பி.சி. செக்சன் சொல்கிறார்கள். நான் வக்கீலுக்கு பிள்ளைதான்; வக்கீல் கிடையாது.

குற்றம் சாட்டுவது என்பது நம்புவது போன்று இருக்க வேண்டும். நான் அரசியல் என்று இறங்கிய பிறகு எனக்கு ஓரு குறிப்பிட்ட பிரிவினர் மட்டுமே போதும் என்று இருக்க முடியாது. அப்படியென்றால் மக்கள் நீதி என்ற பெயருக்கு களங்கம் ஏற்பட்டு விடும். என்ன மதம், சாதியாக இருந்தாலும் என் மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும்.

என்றைக்காவது மதக் கலவரத்தை தூண்டும் வகையில் நான் பேசியிருக்கின்றேனா? வன்முறையே இருக்க கூடாதென்று குரல் கொடுத்தால், நீ கலகம் விளைவிக்கிறாய் என்று கூறுவது உள்மனதை புண்படுத்துகிறது. 

என் வீட்டில் இருப்பவர்கள் இந்து. என்னை விட்டு விடுங்கள். என் மகள் இந்து மதத்தை பின்பற்றுகிறார். இந்துக்களை புண்படுத்துவது போன்று ஒருநாளும் பேச மாட்டேன். 

இவ்வாறு அவர் பேசினார். 

.