This Article is From Jul 06, 2019

வாய்ப்பு தந்த திமுகவுக்கு என் நன்றிகள்: வேட்புமனு தாக்கலுக்கு பின் வைகோ பேட்டி!

மாநிலங்களவைக்கு செல்லும் வாய்ப்பு தந்த திமுகவின் அனைத்து நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கும் என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

Advertisement
தமிழ்நாடு Written by

நாடாளுமன்ற மாநிலங்களவையில் தமிழக எம்.பிக்கள் 6 பேரின் பதவி காலம் இம்மாதம் 24-ந் தேதியுடன் முடிவடைகிறது. எனவே தமிழகத்தில் இருந்து புதிதாக 6 எம்.பி.க்களை தேர்ந்தெடுப்பதற்காக வருகிற 18-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.

இதற்காக, தமிழக சட்டப்பேரவையில் தற்போதுள்ள உறுப்பினர்களின் அடிப்படையில், அதிமுக மற்றும் திமுக சார்பில் தலா 3 உறுப்பினர்களை தேர்வு செய்ய முடியும்.

அதன்படி, திமுக சார்பில் தொழிலாளர் முன்னேற்ற சங்க பேரவை பொதுச்செயலாளர் மு.சண்முகம், சென்னை உயர்நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

இதேபோல், மக்களவை தேர்தலின் போது, ஏற்கனவே செய்துகொண்ட ஒப்பந்தத்தின்படி, மதிமுகவுக்கு ஒரு சீட்டையும் ஒதுக்கினர். இதைத்தொடர்ந்து, மதிமுக சார்பில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டார்.

Advertisement

இதனிடையே, வைகோ மீதான தேசத்துரோக வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கிய சிறப்பு நீதிமன்றம் வைகோவிற்கு ஒரு ஆண்டு சிறைத் தண்டனை விதித்தது. பின்னர் சிறிது நேரத்தில் தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டது. இதனால் வைகோ மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிட தடை ஏதும் இல்லை என்பதால், இன்று அவர் மாநிலங்களவைத் தேர்தலுக்கான தனது வேட்புமனுவினை தாக்கல் செய்தார்.

தலைமைச் செயலகத்தில் தேர்தல் நடத்தும் அதிகாரியான சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசனிடம் வைகோ தனது வேட்புமனுவை அளித்தார். இதேபோல திமுக வேட்பாளர்கள் சண்முகம், வில்சன் ஆகியோரும் தங்களது வேட்புமனுவினை தாக்கல் செய்தனர். வேட்புமனுத் தாக்கலின்போது திமுக தலைவர் ஸ்டாலின், கனிமொழி, துரைமுருகன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

Advertisement

வேட்புமனு தாக்கலுக்கு பின் தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த வைகோ கூறியதாவது, மாநிலங்களவைக்கு செல்லும் வாய்ப்பு தந்த திமுகவுக்கு என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். திமுகவின் அனைத்து நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கும் நன்றிகள்.

தமிழக வாழ்வாதரங்களை காப்பதற்காக, தமிழக வாழ்வாதரங்கள் மீது கோர தாக்குதல் நடத்த படையெடுத்து வரும் மத்திய அரசின் திட்டங்களை தடுத்து நிறுத்துவதற்காக, ஈழத்தமிழர்களின் உரிமையை காப்பதற்காக, ஜனநாயகத்தின் ஒளிவிளக்கு அனைந்து போகாமல் பாதுகாப்பதற்காக, மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு செல்லுகின்ற வாய்ப்பை பெற்றால், என் கடமையை அர்ப்பணிப்பு உணர்வுடன் நிறைவேற்றுவேன் என்று அவர் கூறியுள்ளார்.

Advertisement