மைசூரு தசரா திருவிழாவின் போது 60 வயதான பெண் இட்லி சாப்பிடும் போட்டியில் வென்றார்
Mysuru, Karnataka: பெண்களுக்காக பிரத்தியேகமாக நடந்த இட்லி உண்ணும் போட்டியில் 60 வயது பாட்டி வெற்றி பெற்றுள்ள சம்பவம் காண்போரை திகைப்பில் ஆழ்த்தியது.
கர்நாடகாவின் மைசூர் மாவட்டத்தில் நடந்து வரும் தசரா விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக பல்வேறு போட்டிகளும் நடைபெற்று வருகின்றன. இதில், பெண்களுக்காக பிரத்தியேகமாக இட்லி சாப்பிடும் போட்டி நடைபெற்றது. இதில், பல்வேறு வயதுக்குட்பட்ட பல பெண்களும் கலந்துகொண்டனர்.
போட்டியில் கலந்து கொண்ட அனைவரும், ஒரு பெரிய டேபிளில் வரிசையாக அமரவைக்கப்பட்டனர், அவர்களுக்கு இட்லியுடன், சாம்பாரும் பரிமாறப்பட்டது.
இதில், விழா ஏற்பாட்டாளர்கள், போட்டி தொடங்கி சரியாக ஒரு நிமிடம் ஆனதும், போட்டியாளர்களை உணவு உட்கொள்வதை நிறுத்த செய்தனர். அப்போது, மைசூர் மாவட்டத்தில் உள்ள கிராமம் ஒன்றை சேர்ந்த அந்த பாட்டி, புன்னகைத்த படி அமர்ந்திருந்துள்ளார்.
சரோஜாம்மா என்ற அந்த பாட்டி, 1 நிமிடத்தில் 6 இட்லிகளை உண்டு போட்டியை எளிதாக வென்றுள்ளார்.
மைசூரில் தசரா என்பது பெரும் பிரபலமான திருவிழா ஆகும். ஒவ்வொரு வருடமும், செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதத்தில் நடைபெறும் இந்த திருவிழா 10 நாட்கள் வரை கொண்டாடப்படும்.
அந்தவகையில், இந்த வருடம் மைசூர் தசரா செப்.29 முதல் அக்.8 வரை நடைபெறுகிறது.