This Article is From Jun 19, 2019

நடிகர் சங்கத் தேர்தலை நிறுத்த பதிவாளர் உத்தரவு!

நடிகர் சங்கத் தேர்தலை நிறுத்தி வைக்க தென்சென்னை மாவட்ட சங்களின் பதிவாளர் உத்தரவிட்டுள்ளார். அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு காணும் வரை, தேர்தல் குறித்த நடவடிக்கைகள் நிறுத்தப்படுகிறது என பதிவாளர் தெரிவித்துள்ளார்.

நடிகர் சங்கத் தேர்தலை நிறுத்த பதிவாளர் உத்தரவு!

நடிகர் சங்கத் தேர்தல் வரும் 23ம் தேதி நடைபெற இருந்தது. இதில் நடிகர் நாசர் தலைமையிலான பாண்டவர் அணியும், கே.பாக்யராஜ் தலைமையிலான சுவாமி சங்கரதாஸ் அணியும் மோதுகிறது. இதற்கான பிரசாரத்தில் இரு தரப்பும் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். ஓய்வுபெற்ற நீதிபதியான பத்மநாபன் தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்டு இத்தேர்தலை நடத்துகிறார்.

இதனிடையே, நடிகர் சங்கத் தேர்தலில் போட்டியிடும் பாண்டவர் அணியினர் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை இன்று சந்தித்து பேசினர். இதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய விஷால், நடிகர் சங்க தேர்தலை நியாயமான முறையில் போதிய பாதுகாப்புடன் நடத்த ஆளுநரிடம் கோரிக்கை வைத்துள்ளோம் என தெரிவித்தார்.

தொடர்ந்து, ஆளுநருடன் விஷால் தரப்பு ஆலோசித்த நிலையில், நடிகர் சங்கத் தேர்தலை நிறுத்தி வைக்க தென்சென்னை மாவட்ட சங்களின் பதிவாளர் உத்தரவிட்டுள்ளார். பாரதிபிரியன் மற்றும் 61 உறுப்பினர்களின் புகார் மனுவை விசாரித்த பதிவாளர் தேர்தலை நிறுத்தி வைக்க ஆணையிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பதிவாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 44 தொழில்முறை உறுப்பினர்களை தொழில்முறை அல்லாத உறுப்பினர்களாக மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். பதவிக்கால நீட்டிப்பு ஏப்ரலில் முடிந்த பின் தேர்தல் நடத்த நிர்வாகிகள் எடுத்த முடிவையும் பரிசீலிக்க வேண்டியுள்ளது. எந்த வருட உறுப்பினர் பட்டியலை வைத்து தேர்தலை நடத்தலாம் எனவும் ஆய்வு செய்ய வேண்டி உள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

.