This Article is From Mar 05, 2019

‘அது வேற வாய்…’- நாஞ்சில் சம்பத்தின் ‘அதிமுக டூ திமுக’ சேஞ்ச்-ஓவர்!

ஜெயலலிதா உயிருடன் இருக்கும்போது, அதிமுக-வின் கொள்கைப் பரப்புச் செயலாளராக இருந்தவர் நாஞ்சில் சம்பத்.

‘அது வேற வாய்…’- நாஞ்சில் சம்பத்தின் ‘அதிமுக டூ திமுக’ சேஞ்ச்-ஓவர்!

ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர், அதிமுக இரண்டாக உடைந்து சசிகலா அணி, ஒ.பன்னீர்செல்வம் அணி என்று பிரிந்தபோது, சசிகலா அணியில் ஐக்கியமானார் சம்பத்.

ஹைலைட்ஸ்

  • சம்பத், வெகு நாட்கள் அதிமுக-வில் இருந்தார்
  • அதிமுக-வில் அவர் கொ.ப.செ-வாக இருந்தார்
  • கடைசியாக அவர் தினகரன் தலைமையிலான அதிமுக அணியில் இருந்தார்

ஜெயலலிதா உயிருடன் இருக்கும்போது, அதிமுக-வின் கொள்கைப் பரப்புச் செயலாளராக இருந்தவர் நாஞ்சில் சம்பத். ஆனால், இப்போது அதிகாரபூர்வமாக எந்தக் கட்சியிலும் உறுப்பினராக அவர் இல்லை. இந்நிலையில் சமீபத்தில் திமுக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட பொது நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நாஞ்சில் சம்பத், ஸ்டாலின் குறித்தும் திமுக குறித்தும் புகழ்ந்து பேசியுள்ளார். 

அரசியலில் கட்சித் தாவல் என்பது சாதரணம்தான் என்றாலும், நாஞ்சில் சம்பத், அதிமுக மேடையில் என்ன பேசினாரோ அதையை அச்சிப் பிசுறாமல் அப்படியே திமுக மேடையில் பேசியுள்ளார். இதுதான் தற்போது பலத்த விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது. இந்த இரண்டு வீடியோக்களையும் ஒன்றாக இணைத்து பலர் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர், அதிமுக இரண்டாக உடைந்து சசிகலா அணி, ஒ.பன்னீர்செல்வம் அணி என்று பிரிந்தபோது, சசிகலா அணியில் ஐக்கியமானார் சம்பத். சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா சிறைக்குச் சென்ற பின்னர், டிடிவி தினகரன் அணியில் இணைந்தார் சம்பத். அந்தப் பிரிவின் கொள்கைப் பரப்புச் செயலாளராகவும் இருந்து வந்தார். 

ஒரு கட்டத்தில் தினகரன், அதிமுக-விலிருந்து வெளியேறி அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற புதிய கட்சியை ஆரம்பித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த சம்பத், ‘திராவிடமும் அண்ணாவும் இல்லாத இடத்தில் எனக்கு வேலை இல்லை' என்று சொல்லி நடையைக் கட்டினார். 

இந்த வெளியேற்றத்துக்குப் பின்னர் திமுக-வுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்தார் நாஞ்சில் சம்பத். இருந்தும் இதுவரை ஸ்டாலினிடமிருந்து அவருக்கு அதிகாரபூர்வ அழைப்பு எதுவும் வரவில்லை. இதற்கிடையில் ஆர்.ஜே.பாலாஜி நடத்த எல்.கே.ஜி படத்தில் சம்பத் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில், திமுக-வுக்கு ஆதரவாக சம்பத் பேசி வருகிறார். 

.