This Article is From Nov 21, 2018

நக்கீரன் கோபால் கைது விவகாரம்: குற்றவியல் நீதிமன்ற நீதிபதிக்கு உயர்நீதிமன்றம் கேள்வி

நக்கீரன் கோபால் கைதின் போது நீதிமன்றத்தில், பத்திரிகையாளர் இந்து என்.ராம் கருத்து தெரிவிக்க எந்த சட்டத்தின் அடிப்படையில் அனுமதி வழங்கப்பட்டது

Advertisement
Tamil Nadu Posted by

நக்கீரன் கோபால் கைதின் போது நீதிமன்றத்தில், பத்திரிகையாளர் இந்து என்.ராம் கருத்து தெரிவிக்க எந்த சட்டத்தின் அடிப்படையில் அனுமதி வழங்கப்பட்டது என்பது குறித்து எழும்பூர் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி விளக்கம் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் நக்கீரன் இதழில் கட்டுரை வெளியிட்டதாக ஆளுநர் மாளிகை தரப்பில் அளிக்கப்பட்ட புகாரை தொடர்ந்து, கடந்த அக.1ஆம் தேதி நக்கீரன் ஆசிரியர் கோபாலை போலீசார் கைது செய்து எழும்பூர் 13வது குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இந்த வழக்கு விசாரணையின் போது, ஊடகப் பிரதிநிதியாக இந்து என்.ராம் அவரது கருத்தை தெரிவிக்க நீதிபதி அனுமதி அளித்திருந்தார். தொடர்ந்து, வழக்கை விசாரித்த நீதிபதி கோபிநாதன், நக்கீரன் கோபாலை விடுவித்து உத்தரவிட்டார்.

இந்நிலையில், கடந்த அக.9 ஆம் தேதி எழும்பூர் நீதிமன்றம் நக்கீரன் கோபாலை விடுவிக்க உத்தரவிட்டதை எதிர்த்து தமிழக காவல்துறை சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி ஆனந்த வெங்கடேஷ் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்குக்கு தொடர்பில்லாத மூன்றாவது நபரான இந்து என்.ராம் கருத்து கேட்கப்பட்டதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

Advertisement

இதனை ஏற்க மறுத்த நீதிபதி, நீதிமன்றங்களில் மூன்றாவது நபர் வாதிடுவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று தெரிவித்தார். நீதிமன்றமானது சட்டங்களை மட்டும் தான் பின்பற்ற வேண்டும் என்றும் அதை மக்களின் கருத்துக்களை தெரிவிக்கும் தளமாக மாற்ற கூடாது. எனவும் கருத்து தெரிவித்தார்.

மேலும், இந்து என்.ராம் பேச அனுமதித்தது ஏன்? எந்த சட்டத்தின் அடிப்படையில்  அவர் பேச நீதிபதி அனுமதித்தார் என்பது குறித்து வரும் 28ஆம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை 29ஆம் தேதிக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டார்.

Advertisement


 



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
Advertisement