This Article is From Oct 13, 2018

‘நக்கீரன்’ இதழின் 34 ஊழியர்கள் முன் ஜாமின் கோரி மனு..!

கோபால் மீது பதியப்பட்ட எஃப்.ஐ.ஆர் பதிவில், 34 ஊழியர்களின் பெயர்களும் சேர்க்கப்பட்டுள்ளதால், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது

‘நக்கீரன்’ இதழின் 34 ஊழியர்கள் முன் ஜாமின் கோரி மனு..!

ஆளுநருக்கு எதிராக அவதூறு கட்டுரை எழுதியதாக குற்றம் சாட்டப்பட்டு, நக்கீரன் இதழின் ஆசிரியர் கோபால் சில நாட்களுக்கு முன்னர் கைது செய்யப்பட்டார். ஆனால், அன்றே அவர் நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டார். இந்நிலையில் நக்கீரன் நிறுவனத்தில் பணி புரிந்து வரும் 34 ஊழியர்கள், முன் ஜாமின் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளனர். கோபால் மீது பதியப்பட்ட எஃப்.ஐ.ஆர் பதிவில், 34 ஊழியர்களின் பெயர்களும் சேர்க்கப்பட்டுள்ளதால், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகிதுக்கு எதிராக அவதூறான வகையில் கட்டுரை எழுதியதாக குற்றம் சாட்டப்பட்டு, ‘நக்கீரன்’ இதழின் ஆசிரியர் கோபால் சென்னை விமான நிலையத்தில் அக்டோபர் 9 ஆம் தேதி கைது செய்யப்பட்டார். அவர் மீது ஐபிசி 124-ன் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு சென்னை சிந்தாதிரிப்பேட்டை காவல்நிலையம் அழைத்து செல்லப்பட்டார். நிர்மலா தேவி விவகாரம் குறித்து நக்கீரன் இதழில் எழுதப்பட்ட கட்டுரையில் ஆளுநர் குறித்து அவதூறான கருத்து இருந்ததாக கூறப்பட்டு கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இதையடுத்து அன்றே கைது குறித்து நீதிமன்றம் விசாரணை நடத்தியது. நீதிமன்றத்தில் போலீஸ் தரப்பு, கோபாலை சிறையில் அடைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தது. ஆனால் நீதிமன்றம், 124வது பிரிவின் கீழ் கோபால் மீது வழக்குப் பதிவு செய்தது செல்லாது என்று தீர்ப்பு வழங்கினார். மேலும், கோபாலை விடுதலை செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில் எஃப்.ஐ.ஆர் பதிவில் கோபால் அல்லாமல் 34 பேர் மீது வழக்கு பதியப்பட்டிருக்கிறது. அவர்கள் தான் முன் ஜாமின் கோரி உயர் நீதிமன்றத்தை அணுகினர்.

இது குறித்து விசாரித்த உயர் நீதிமன்றம், வரும் 25 ஆம் தேதிக்குள் காவல் துறை மனு குறித்து பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
.