This Article is From Apr 15, 2019

நளினி பரோல் வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

மகள் திருமணத்திற்காக 6 மாதம் பரோல் கேட்ட நளினி மனு குறித்து பதிலளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நளினி பரோல் வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் கைதியாக வேலூர் சிறையில் 27 ஆண்டுகளாக தண்டனை அனுபவித்து வருபவர் நளினி. இவரது மகள் ஹரிதா லண்டனில் வசித்து வருகிறார். தன் மகள் ஹரிதாவின் திருமண ஏற்பாடுகளை கவனிக்க 6 மாதங்கள் பரோல் வழங்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் நளினி வழக்கு தொடர்ந்திருந்தார்.

அவர் தாக்கல் செய்த மனுவில், இதுவரை, 10 ஆண்டு சிறை தண்டனை அனுபவித்த 3,700 ஆயுள் கைதிகளை தமிழக அரசு விடுதலை செய்துள்ளது. ஆயுள் கைதிகளுக்கு 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒரு மாதம் பரோல் வழங்க சிறை விதிகள் வகை செய்துள்ள போதிலும், 27 ஆண்டுகளாக தனக்கு பரோல் வழங்கப்படவில்லை.

எனவே, மகள் திருமணத்திற்காக 6 மாதங்கள் பரோல் வழங்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார். மேலும், இந்த மனு மீதான விசாரணைக்கு தானே நேரில் ஆஜராகி வாதிட அனுமதிக்க வேண்டும் என்றும் கோரியிருந்தார்.

இந்நிலையில், இன்று இந்த வழக்கு விசாரணையின் போது, ஜூன் 11ஆம் தேதிக்குள் பதிலளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும், அவரசமாக பரோல் தேவை என்றால் விடுமுறை கால நீதிமன்றத்தை அணுகி நிவாரணம் பெற நளினிக்கு உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

.