கடந்த ஜூலை 25 ஆம் தேதி, அவர் வேலூர் மத்திய சிறையிலிருந்து வெளியே வந்தார் நளினி.
Chennai: ராஜீவ் காந்தி கொலை வழக்கின் குற்றவாளிகளில் ஒருவரான நளினி, தற்போது பரோலில் இருக்கிறார். அவர், தனது பரோலை மேலும் ஒரு மாதம் நீட்டிக்கச் சொல்லி தமிழக அரசிடம் கோரியுள்ளார்.
இது குறித்து நளினியின் வழக்கறிஞரான பி.புகழேந்தி, “தனது மகளின் திருமணம் சீக்கிரமே நடக்க உள்ளதால் அதற்குத் தேவையான வேலைகள் செய்ய வேண்டி பரோலை ஒரு மாதம் நீட்டிக்கச் சொல்லி தமிழக அரசின் உள்துறை செயலாளரிடம் மனு கொடுத்துள்ளார் நளினி.
இது குறித்தான மனு, தமிழக அரசுக்கு விரைவு அஞ்சல் மூலம் கடந்த 7 ஆம் தேதி அனுப்பப்பட்டுள்ளது.” என்று தகவல் தெரிவித்துள்ளார்.
கடந்த மாதம், சென்னை உயர் நீதிமன்றம் நளினிக்குப் பரோல் கொடுத்தது. அதைத் தொடர்ந்து கடந்த ஜூலை 25 ஆம் தேதி, அவர் வேலூர் மத்திய சிறையிலிருந்து வெளியே வந்தார்.
நளினி, வெளியே வந்தததைத் தொடர்ந்து தனது கணவரான முருகனை வேலூர் சிறையில் சென்று ஒரு முறை சந்தித்துள்ளார். அப்போது மகளின் திருமணம் குறித்து அவர் ஆலோசனை செய்ததாக கூறப்படுகிறது.
கடந்த 27 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் நளினி, முன்னதாக 6 மாத பரோல் கேட்டு மனு தாக்கல் செய்திருந்தார். ஆனால், அவருக்கு பல நிபந்தனைகளுக்கு உட்பட்ட 1 மாதப் பரோல் மட்டுமே வழங்கப்பட்டது. பரோலில் கட்டுப்பாடுகளின்படி அவர் வேலூரிலேயே தங்கி மகளின் திருமண ஏற்பாடுகளை கவனித்து வருகிறார்.