This Article is From Jul 18, 2019

7 பேர் விடுதலை தொடர்பான தீர்மானத்தில் கவர்னர் விரைந்து முடிவெடுக்கக் கோரிய வழக்கு தள்ளுபடி!!

ராஜிவ் கொலை வழக்கில் தொடர்புடைய 7 பேரை விடுவிக்கக் கோரி தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதுதொடர்பாக கவர்னர் முடிவு எடுக்க வேண்டும் என நளினி தரப்பில் வழக்கு தொடரப்பட்டது.

7 பேர் விடுதலை தொடர்பான தீர்மானத்தில் கவர்னர் விரைந்து முடிவெடுக்கக் கோரிய வழக்கு தள்ளுபடி!!

மகளின் திருமண ஏற்பாடுகளை கவனிப்பதற்காக நளினிக்கு ஒரு மாதம் பரோல் வழங்கப்பட்டுள்ளது.

Chennai:

7 பேர் விடுதலை தொடர்பான தீர்மானத்தில் கவர்னர் விரைந்து முடிவு எடுக்கக்கோரி நளினி தரப்பில் தொடரப்பட்ட மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. 

இதுதொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஆர். சுப்பையா, சி. சரவணன் ஆகியோர் கொண்ட அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கு விசாரணைக்கு ஏற்புடையது அல்ல என்று கூறி மனுவை தள்ளுபடி செய்தனர். 
இந்த மனு குறித்து நீதிபதிகள் கூறுகையில், அரசியலமைப்பு சட்டம் பிரிவு 361-ன்படி மாநிலத்தின் கவர்னராக இருப்பவர் எந்த நீதிமன்றத்திற்கும் பதில் அளிக்க வேண்டியதில்லை. அரசியலைமைப்பு சட்ட கடமையை நிறைவேற்ற கவர்னருக்கு முன்னுரிமையும், முழு சுதந்திரமும் கொடுக்கப்பட்டுள்ளது. 

எனவே மாநில கவர்னர் ஒருவர் அரசியலமைப்பு சட்டத்தை மீறி நடந்தாரா என்பது பற்றி அரசியலமைப்பு சட்டம் பிரிவு 226-ன்படி நீதிமன்றங்கள் கேள்வி கேட்க முடியாது என்று தெரிவித்தனர். 

ராஜிவ் கொலை வழக்கில் ஸ்ரீகரன் என்கிற முருகன், சுதந்திர ராஜா என்கிற சாந்தன், பேரறிவாளன், ஜெயக்குமார், ராபர்ட் பயாஸ், நளினி ஆகியோர் சிறைத்தண்டனை அனுபவித்து வருகின்றனர். அவர்களை விடுக்க வேண்டும் என்று தமிழக சட்டசபையில் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. தற்போது இந்த ஏழுபேரின் விடுதலை தமிழக கவர்னரின் கையில் உள்ளது.


இதற்கிடையே மகளின் திருமண ஏற்பாடுகளை கவனிப்பதற்காக ராஜிவ் கொலை வழக்கில் சிறைத்தண்டனை அனுபவித்து வரும் நளினிக்கு ஒரு மாத பரோல் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. 

.