28 ஆண்டுகளாக சிறையில் உள்ள நளினி
Chennai: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நளினி, தனது மகள் ஹரித்ராவின் திருமணத்திற்காக வேலூர் மகளிர் சிறையில் இருந்து ஒரு மாத பரோலில் வெளியே வந்தார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் கைதியாக பேரறிவாளன், முருகன், நளினி, ராபர்ட் பயாஸ், ரவிச்சந்திரன் உள்பட 7 பேர் கடந்த 27 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் தண்டனை அனுபவித்து வருகின்றனர். அவர்களை விடுதலை செய்யக்கோரி தமிழக கட்சிகள் போராட்டங்கள் நடத்தி வருகின்றன. மேலும் பேரறிவாளன் உட்பட 7 பேரை விடுதலை செய்ய வேண்டும் என நீதிமன்றத்திலும் வழக்குகள் தொடரப்பட்டது.
இதையடுத்து நீதிமன்றம் அந்த 7 பேரை விடுவிக்கும் உரிமையை மாநில அரசிடம் ஒப்படைத்தது. இதன் பின்னர் தமிழக அரசு ஆளுநருக்கு கடிதம் எழுதியது. ஆனால் தமிழக ஆளுநர் இன்னும் முடிவெடுக்காததால், அவர்களை விடுதலை செய்வதில் தாமதமாகி வருகிறது.
இந்தநிலையில், ஏழு பேரில் ஒருவராகிய நளினி, தனது மகள் திருமணத்துக்காக 6 மாதங்கள் பரோல் வழங்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். அவர் தாக்கல் செய்த மனுவில், இதுவரை, 10 ஆண்டு சிறை தண்டனை அனுபவித்த 3,700 ஆயுள் கைதிகளை தமிழக அரசு விடுதலை செய்துள்ளது. ஆயுள் கைதிகளுக்கு 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒரு மாதம் பரோல் வழங்க சிறை விதிகள் வகை செய்துள்ள போதிலும், 27 ஆண்டுகளாக தனக்கு பரோல் வழங்கப்படவில்லை.
எனவே, மகள் திருமணத்திற்காக 6 மாதங்கள் பரோல் வழங்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார். மேலும், இந்த மனு மீதான விசாரணைக்கு தானே நேரில் ஆஜராகி வாதிட அனுமதிக்க வேண்டும் என்றும் கோரியிருந்தார்.
அதற்கு அனுமதி அளித்த நீதிமன்றம், பரோல் சம்பந்தமான வழக்கை, அண்மையில் விசாரித்தது. அப்போது, தமிழக அரசு தரப்பில், சிறை விதிகளின்படி 6 மாதம் பரோல் வழங்க முடியாது. பேரறிவாளனுக்கு பரோல் வழங்கியது போல ஒரு மாதம் தான் விடுப்பு வழங்க முடியும் என்று கூறப்பட்டது.
நளினி தரப்பில், நேரில் வாதாட வாய்ப்பளித்த நீதிமன்றத்திற்கு கோடி நன்றிகள். எனக்கு தேவையான அனைத்து உரிமைகளையும் நீதிமன்றம் மூலம் பெற்றுள்ளேன். ராஜீவ் கொலையில் குற்றம் செய்யாமலேயே குற்றவாளி ஆக்கப்பட்டுள்ளோம். கடந்த 28 ஆண்டுகளாக சிறையில் உள்ளோம். தாயாக ஒரு மகளுக்கு செய்ய வேண்டியதை, இதுவரை நாங்கள் செய்யவில்லை. எனக்கு 6 மாதம் பரோல் வழங்க வேண்டும் எனக் கூறினார்.
இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள், 6 மாதங்கள் பரோல் வழங்க சட்டத்தில் இடமில்லை எனக்கூறி, நளினிக்கு ஒரு மாதம் பரோல் வழங்கி உத்தரவிட்டனர். மேலும், பரோலில் உள்ள ஒரு மாதமும் நளினி வேலூரை விட்டு வெளியே செல்லக்கூடாது, அரசியல் பிரதிநிதிகள் மற்றும் ஊடகங்களை சந்திக்கக் கூடாது என்று கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், இன்று காலை 9 மணியளவில் வேலூர் மத்திய சிறையில் இருந்து வெளியே வந்தார். தனது 28 சிறை வாசத்தில் தந்தை மரணத்தின் போது 12 மணி நேர பரோலில் நளினி வெளிவந்திருந்தார். அதன் பின்னர், தற்போது ஒருமாத பரோலில் வெளிவந்துள்ளார்.
சிறையில் இருந்து வெளிவந்த நளினியை அவரது தாயார் வரவேற்றார். தொடர்ந்து, லண்டனில் உள்ள நளினியின் மகள் ஹரித்திரா விரைவில் வேலூர் வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.