இந்தப் பயணம் மோடியின் 3-வது இலங்கை பயணமாகும்.
Colombo: பிரதமர் நரேந்திர மோடி ஞாயிறன்று இலங்கை செல்கிறார். அங்கு அந்நாட்டு அதிபர் மைத்ரி பால சிறிசேனவுடன் முக்கிய பேச்சுவார்த்தையில் மோடி ஈடுபடுகிறார்.
இலங்கையில் கடந்த ஈஸ்டர் பண்டிகையன்று தொடர் குண்டுவெடிப்பு நடந்தது. இதில் 250-க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். அவர்களில் 11 பேர் இந்தியர்கள் ஆவர். இந்த சம்பவத்திற்கு பின்னர்
இலங்கைக்கு பிரதமர் மோடி செல்லும் 3-வது பயணம் இதுவாகும். முன்னதாக 2015 மற்றும் 2017 ஆகிய ஆண்டுகளில் மோடி இலங்கைக்கு சென்றார். இதுகுறித்து இலங்கை அதிபர் அலுவலகம் வெளியிட்டுள்ள தகவலில், 'ஞாயிறன்று இந்திய பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு வருகிறார். அவருடன் அதிபர் சிறிசேன பேச்சுவார்த்தை நடத்துகிறார்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த பயணத்தின்போது பிரதமர் மோடிக்கு இலங்கை அதிபர் மதிய விருந்தை அளிக்கவுள்ளார். மோடியின் வருகையை ஒட்டி தலைநகர் கொழும்புவில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இலங்கையில் ஈஸ்டர் தினமான ஏப்ரல் 21-ம்தேதி தொடர் குண்டுவெடிப்பு நடந்தது. இதுதொடர்பாக மத்திய அரசு முன்கூட்டியே எச்சரிக்கை செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.