காங்கிரஸின் அராஜகப் போக்கு யாரையும் விட்டு வைத்ததில்லை, பிரதமர் மோடி
ஹைலைட்ஸ்
- எதிர்கட்சிகளின் கூட்டணியே, 'மகா கூட்டணி' எனப்படுகிறது
- எதிர்கட்சிகளின் கூட்டணி சுயநலத்துக்காகவே, மோடி பேச்சு
- மக்கள் எதிர்கட்சியினரின் கூட்டணியை ஏற்க மாட்டார்கள், மோடி திட்டவட்டம்
Chennai: அடுத்த ஆண்டு நடக்கவுள்ள மக்களவைத் தேர்தலில், எதிர்கட்சிகள் ஒன்றாக கூட்டணி வைத்து தேர்தலை சந்திக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்து பேசியுள்ள பிரதமர் நரேந்திர மோடி, ‘எதிர்கட்சிகளின் மகா கூட்டணி, அவர்களைக் காப்பாற்றிக் கொள்ளவே தவிர, மக்களைக் காப்பாற்ற அல்ல' என்று காட்டமாக விமர்சித்துள்ளார்.
பிரதமர் மோடி, தமிழகத்தில் உள்ள பாஜக-வின் வாக்குச்சாவடி நிலை நிர்வாகிகளிடம் தொடர்ந்து வீடியோ மூலம் உரையாற்றி வருகிறார். நேற்று அவர், சென்னை, மதுரை, திருச்சி, திருவள்ளூர் உள்ளிட்ட பாஜக தொண்டர்கள் மத்தியில் உரையாடினார்.
அப்போது பேசுகையில், ‘தெலுங்கு தேசம் கட்சியை ஆரம்பித்தவர் நடிகர் என்.டி.ராமா ராவ். அவர் காங்கிரஸுக்கு எதிராகத்தான் கட்சியையே ஆரம்பித்தார். ஆனால், இன்று அந்தக் கட்சி காங்கிரஸுடன் கூட்டணி வைத்துள்ளது.
பலர், இன்று அடுத்தத் தேர்தலுக்கு அமையப் போகும் மகா கூட்டணி குறித்து தொடர்ந்து பேசி வருகின்றனர். அந்தக் கூட்டணியில் இருப்பவர்கள் தங்களைக் காப்பாற்றிக் கொள்ளத்தான் முயல்வார்கள். மக்களைக் காப்பாற்ற மாட்டார்கள். கொள்கை அடிப்படையில் அந்தக் கூட்டணி அமையாது.
காங்கிரஸின் அராஜகப் போக்கு யாரையும் விட்டு வைத்ததில்லை. கடந்த 1980 ஆம் ஆண்டு, எம்.ஜி.ஆர் தலைமையில் அமைந்திருந்த தமிழக அரசை, மத்தியில் ஆட்சி செய்த காங்கிரஸ் தடாலடியாக கலைத்தது. மக்கள் ஆதரவு எம்.ஜி.ஆருக்கு இருந்தபோதும், அராஜகம் செய்தது காங்கிரஸ்' என்று பேசினார்.