Chennai: ‘தமிழ்நாட்டில் அரசு கொண்டு வரும் திட்டங்களை எதிர்ப்பவர்களுக்கு தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பு இருக்கிறது’ என்று பிரதமர் மோடி கருத்து தெரிவித்துள்ளார்.
தமிழ் செய்தித் தாளான தினத் தந்திக்கு பிரதமர் மோடி அளித்த பேட்டியில் இந்தக் கருத்தை அவர் தெரிவித்துள்ளார். ‘அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழகத்தில் தீவிரவாத அமைப்புகளின் நடமாட்டம் உள்ளது’ என்று கூறிய கருத்து குறித்து மோடி, ‘அரசு திட்டங்களை எதிர்ப்பவர்களுக்கு தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பு இருப்பது உண்மைதான். நான் மட்டும் இந்தக் கருத்தை கூறவில்லை. எனக்கு முன்னால் பிரதமராக இருந்த மன்மோகன் சிங்கும், கூடங்குளம் அணுஉலை திட்டத்தை எதிர்ப்பவர்களுக்கு வெளிநாட்டு என்.ஜி.ஓ-க்கள் துணையாக இருக்கிறது என்று கூறினார்’ என்றார்.
மேலும், ‘அமித்ஷா, தமிழகம் தான் இருப்பதிலேயே ஊழல் மலிந்த மாநிலம்’ என்று கூறிய கருத்துக்கு மோடி, ‘எனது அரசு ஊழலுக்கு எதிரானது. எங்கு ஊழல் நடந்தாலும் அதற்கு எதிராக நான் போராடுவேன். சுதந்திரத்துக்குப் பிறகு எங்களைப் போல ஊழலுக்கு எதிராக போராடியவர்கள் யாரும் இல்லை’ என்று பதிலளித்தார்.
இதையடுத்து, ‘ரஜினி கட்சி ஆரம்பித்த உடன் அவருடன் கூட்டணி வைப்பீர்களா?’ என்று கேட்கப்பட்டதற்கு, ‘அனுமான அடிப்படையில் கேட்கப்படும் கேள்விக்கு பதில் அளிக்க முடியாது’ என்றுள்ளார்.
தமிழகத்தில் பல்வேறு திட்டங்களுக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில் பிரதமரின் இந்தக் கருத்து முக்கியத்துவம் பெறுகிறது.