"ஒரு காவல்துறை அதிகாரியின் மரணத்தைவிட, ஒரு பசு கொல்லப்பட்டால் அதிக முக்கியத்துவம் தருகிறது இந்தியா" என்று நஸ்ரூதின் ஷா கூறியுள்ளார்.
New Delhi: பாலிவுட் நடிகர் நஸ்ரூதின் ஷாவின் பேச்சு மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவர், "ஒரு காவல்துறை அதிகாரியின் மரணத்தைவிட, ஒரு பசு கொல்லப்பட்டால் அதிக முக்கியத்துவம் தருகிறது இந்தியா" என்று கூறியது சர்ச்சையான விவாதமாகியுள்ளது. பாஜகவினர் அவரை "தேசதுரோகி" என்றும், சிலர் "பாகிஸ்தானுக்கு டிக்கெட் எடுத்து தர வேண்டும்" என்றும் வலியுறுத்தி வருகின்றனர்.
உத்தர பிரதேசத்தை சேர்ந்த மஹேந்திர நாத் பாண்டே ''நஸ்ரூதின் ஷா ஒரு நல்ல நடிகர், அவரது படங்களில் ஒரு படத்தில் பாகிஸ்தான் உளவு அதிகாரியாக நடித்திருப்பார். தற்போது அதே கதாப்பாத்திரமாக வாழ்ந்து வருகிறார்'' என்று தெரிவித்துள்ளார்.
1999ம் ஆண்டு வெளியான சர்ஃபரோஷ் படத்தில் பாகிஸ்தான் உளவு அதிகாரியாக நடித்திருப்பார். அந்தக் கதாப்பாத்திரம் பெருமளவில் பேசப்பட்டது. அதை மேற்கோள்காட்டி தான் மஹேந்திரநாத் தெரிவித்துள்ளார்.
68 வயதான நஸ்ரூதின் ஷா சமீபத்திய பேட்டியில் கூறும்போது, "உத்தரபிரதேசத்தில் ஒரு போலீஸ் அதிகாரி கலவரத்தில் கொல்லப்பட்டுள்ளார். ஆனால், அதைவிட்டுவிட்டு முதல்வர் யோகி ஆதித்யநாத் பசுக்களை கொல்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியிருப்ப்பது கோபமளிப்பதாக" கூறியுள்ளார்.
நஸ்ரூதின் ஷா பற்றி நவநிர்மான் அமைப்பின் தலைவர் அமித் ஜானி கூறும்போது ''நஸ்ரூதின் ஷா இந்தியாவில் தங்க பயந்தால் அவர் தாராளமாக பாகிஸ்தான் செல்லலாம். நான் ஆகஸ்ட் 14ம் தேதியன்று அவருக்கு டிக்கெட் வாங்கி தருகிறேன். பாகிஸ்தான் சுதந்திர தினமன்று அவர் அங்கு இருக்கலாம். நாங்களும் ஒரு தேச துரோகி இந்தியாவில் இல்லை என்று மகிழ்ச்சியடைவோம்" என்றார்.