சர்ச்களில் நடைபெறும் பாவமன்னிப்பு வழங்கும் நடைமுறை பெண்களை அச்சுறுத்துகிறது என மகளிர் ஆணையம் கூறியுள்ளது.
New Delhi: பாவமன்னிப்பு வழங்குதல் பெண்களின் ரகசியத்தை வைத்து அவர்களை அச்சுறுத்துவதால், அதனை ஒழிக்க வேண்டும் என்று தேசிய மகளிர் ஆணையம் பரிந்துரைத்துள்ளது.
இது தொடர்பாக கருத்து தெரிவித்த தேசிய மகளிர் ஆணையத் தலைவர் ரேகா சர்மா, "கேரள சர்ச்களில் தொடர்ந்து அதிகரித்து வரும் வன்புணர்வுகள், பாலியல் அத்துமீறல்களைப் பற்றி மத்திய அமைப்பொன்று முறையான விசாரணை மேற்கொள்ள வேண்டும்" என்றார்.
"பாவமன்னிப்பு கோரும்போது கூறும் ரகசியங்களை வெளியே சொல்லிவிடுவேன் என்று மிரட்டி பாதிரியார்கள் கேரள ஆசிரியையை வன்புணர்ந்ததாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது நமக்கு தெரியவந்துள்ள ஒரு சிறு துரும்பு தான். இதுபோல மேலும் பல சம்பவங்கள் இருக்கும்" என்றார்.
பின்னணி:
திருமணமான பெண்ணிடம், அவரது பாவமன்னிப்பு ரகசியத்தை வெளியில் கூறிவிடுவோம் என்று மிரட்டி பல முறை வல்லுறவு கொண்டுள்ளதாக கேரளாவின் மலங்கரா ஆர்த்தடாக்ஸ் சிரியன் சர்ச்சை சேர்ந்த நான்கு பாதிரியார்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர், ஆசிரியையான தன் மனைவியை பாதிரியார்கள் வன்புணர்ந்ததாக. சர்ச்சிடம் புகார்க் கடிதம் அளித்த பின்னர்தான் இச்சம்பவம் வெளியே தெரிய வந்தது.
புகைப்படம் வெளியிடப்பட்டு சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டதால், பாதிக்கப்பட்ட பெண் தனது பணியிலிருந்து விலகவும் நேரிட்டது.
இந்நிலையில்தான் தேசிய மகளிர் ஆணையம் பாவமன்னிப்பு தொடர்பான இப்பரிந்துரைகளை அளித்துள்ளது.
சர்ச்களில் பெண்களுக்கு எதிராக நடைபெறும் பாலியல் குற்றங்களைப் பற்றி ஆராய விசாரணை ஆணையம் ஒன்றையும் தேசிய மகளிர் ஆணையம் அமைத்துள்ளது. இவ்வாணையம் தனது அறிக்கையை பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் இராஜ்நாத் சிங், மகளிர் & குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சர் மேனகா காந்தி மற்றும் கேரள, பஞ்சாப் டி.ஜி.பி-க்களுக்கும் அனுப்பி வைத்துள்ளது.
கோட்டயம் மாவட்டக் காவல்துறைத் தலைவருக்கு சென்ற மாதம் கன்னியாஸ்த்ரீ ஒருவர் அளித்த மற்றொரு புகாரில், ஜலந்தர் பிஷப் பிராங்கோ முலக்கல் தன்னைப் பல வன்புணர்ந்ததாகவும் தன்னுடன் இயற்கைக்கு மாறான முறையில் உடலுறவு கொண்டதாகவும் தெரிவித்துள்ளார். கோட்டயத்துக்கு அருகிலுள்ள சிறிய ஊராட்சிப் பகுதியில் 2014 - 2016 ஆண்டுகளுக்கு இடையே இது நடைப்பெற்றதாக அப்புகாரில் அவர் குறிப்பிட்டுள்ளார்.