2019 National Voters Day : 2011-ம் ஆண்டு முதல் தேசிய வாக்காளர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
நாட்டின் 9-வது தேசிய வாக்காளர் தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நாடு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. தேசிய வாக்காளர் தினம் தொடர்பான 10 தகவல்களை தெரிந்து கொள்ளலாம்.
1. நாட்டில் தேர்தல்களை நடத்துவதற்காக இந்திய தேர்தல் ஆணையம் 1950 ஜனவரி 25-ம்தேதி தொடங்கப்பட்டது. இந்த நாளைத்தான் தேசிய வாக்காளர் தினமாக கொண்டாடி வருகிறோம்.
2. உலகின் மிகப்பெரும் ஜனநாயக நாடாக இந்தியா இருந்து வருகிறது. இங்குள்ள 120 கோடிப்பேர் வாக்களித்து தங்களது பிரதிநிதிகளை தேர்ந்தெடுப்பதுதான் இதற்கான காரணம்.
3. இந்த ஜனநாயகத்தை நிலை நாட்ட தேர்தல் தேவை என்பதால் அதனை நடத்தி வரும் இந்திய தேர்தல் ஆணையம் நாட்டின் உயர்ந்த அமைப்புகளில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.
4. 1950 ஜனவரி 25-ம்தேதி தேர்தல் ஆணையம் தொடங்கப்பட்டது. இருப்பினும் தேசிய வாக்காளர் தினத்தை கடந்த 2011-ம் ஆண்டில் இருந்துதான் நாடு கொண்டாடி வருகிறது.
5. வாக்களிப்பதன் முக்கியத்துவத்தை அனைவருக்கும் உணர்த்துவதுதான் தேசிய வாக்காளர் தினத்தின் நோக்கம்.
6. தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை மாவட்ட நிர்வாகத்தினர் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்துள்ளனர்.
7. காலத்திற்கு ஏற்றவாறு தேர்தல் ஆணையம் தன்னை அப்டேட் செய்து வருகிறது. 18 வயது நிரம்பிய இந்திய குடிமகன் தன்னை வாக்காளராக பதிவு செய்து கொள்ளும் முறைகளை எளிமைப்படுத்தியுள்ளது.
8. வாக்குச் சீட்டு முறையில் தேர்தல் நடத்தி வந்த ஆணையம், கடந்த 1998-ல்தான் வாக்குப்பதிவு எந்திரத்தை பயன்படுத்தியது.
9. 1998-ல் மொத்தம் 16 சட்டசபை தொகுதிகளுக்கு தேர்தல் நடத்தப்பட்டது. மத்திய பிரதேசத்தில் 5, ராஜஸ்தானில் 5, டெல்லியில் 6 ஆகிய தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடந்தது. இதில்தான் முதன்முறையாக வாக்குப்பதிவு எந்திரம் பயன்படுத்தப்பட்டது.
10. நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் வாக்குப்பதிவு எந்திரத்திற்கு பதிலாக வாக்குச் சீட்டு முறையை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கூறி வருகின்றன. இருப்பினும், எந்திரத்தில் தில்லு முல்லு செய்ய முடியாது; வாக்குச் சீட்டு மூலம் தேர்தல் நடத்த முடியாது என்று திட்டவட்டமாக தெரிவித்திருக்கிறது தேர்தல் ஆணையம்.