மகாராஷ்டிர உள்துறை அமைச்சர் புகார் தெரிவித்த சூழலில் சரத் பவார் கருத்து கூறியுள்ளார்.
Mumbai: அனைத்து தலைவர்களுக்கும் தங்களது போன்கள் ஒட்டுக் கேட்கப்படுவது என்பது நன்றாகத் தெரியும் என தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் கூறியுள்ளார். இதனை அவர்கள் பெரிய பிரச்னையாக கருதுவது இல்லை என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.
2019 மக்களவை தேர்தல் மற்றும் சட்டமன்ற தேர்தல்களின்போது மூத்த தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சி தலைவர்களின் போன்கள் ஒட்டுக் கேட்கப்பட்டதாக மகாராஷ்ர உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் குற்றம் சாட்டியிருந்தார்.
இந்த விவகாரம் தொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சரத் பவார், ‘போன்கள் ஒட்டுக் கேட்கப்படுவது என்பது புதிதல்ல. எங்கள் எல்லோருக்கும் எங்களது போன்கள் ஒட்டுக் கேட்கப்படுவது நன்றாகத் தெரியும். இருப்பினும் இதனை ஒரு பெரிய பிரச்னையாக யாரும் எடுத்துக் கொள்வதில்லை' என்றார்.
இதற்கிடையே போன்களை ஒட்டுக் கேட்டதாக மாநில உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் கூறிய குற்றச்சாட்டை முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னாவீஸ் மறுத்துள்ளார். இவ்வாறு ஒட்டுக்கேட்பது மாநில அரசின் கலாசாரம் இல்லை என்று கூறிய அவர், இதுபோன்ற உத்தரவுகள் தங்களது ஆட்சியின்போது பிறப்பிக்கப்படவில்லை என்று தெரிவித்தார்.
மகாராஷ்டிராவில் முந்தைய பாஜக ஆட்சியின்போது முக்கிய அரசியல் தலைவர்களின் போன்கள் ஒட்டுக் கேட்கப்பட்டதாக புகார்கள் எழுந்திருக்கின்றன.. இதுகுறித்து விசாரணை நடத்த சைபர் போலீசாருக்கு மகாராஷ்டிர அரசு உத்தரவிட்டுள்ளது.