New Delhi: பாகிஸ்தான் பிரதமரின் பதவி ஏற்பு விழாவில், அந்நாட்டு ராணுவ தளபதியை கட்டி அணைத்த செய்கைக்காக, நவ்ஜோத் சிங் சித்து மீது பல தரப்பில் இருந்த கண்டனங்கள் பறந்தன. அதற்கெல்லாம் பதில் கொடுத்துள்ளார் சித்து.
மேலும், பாகிஸ்தான் ஆக்கரமிப்பு காஷ்மீரின் அதிபர் மசூத் கானுடன் முன் வரிசையில் அமர்ந்ததற்கு எழுந்த கண்டனங்களுக்கு பதில் அளித்துள்ளார்.
“நான் உட்காரும் இடம் கடைசி நேரத்தில் மாற்றப்பட்டது. விழா தொடங்க 5 நிமிடம் இருக்கும் போது முன் வரிசையில் அமருமாரு கூறினார்கள். அவர்கள் எங்கு அமர சொன்னார்களோ அங்கே அமர்ந்தேன்” என்று விளக்கம் கூறியுள்ளார்.
மேலும், “விழாவில் நான் கலந்து கொண்டது அரசியலுக்காக அல்ல. பழைய நண்பர் இம்ரான் கானின் அழைப்பை ஏற்று தான் சென்றேன். முன்னாள் பிரதமர் வாஜ்பாய், லாஹூருக்கு பேருந்தில் சென்றிருக்கிறார். பிரதமர் மோடி, திடீரென பாக்., பிரதமர் இல்லத்துக்கு சென்று பிறந்த நாள் வாழ்த்து கூறினார். அப்போது நவாஸ் ஷரிஃபை மோடி கட்டி அணைத்தார். ஆனால் யாரும் மோடியிடம் கேள்வி எழுப்பவில்லையே ஏன்? என்று சுட்டிக் காட்டி பேசியுள்ளார் சித்து.
பஞ்சாப் காங்கிரஸ் தலைவரின் விமர்சன குறித்து கேட்டதற்கு “கட்சியின் கேப்டன் என்னை விமர்சித்துள்ளார். கேப்டன் எனக்கு எதிராக பேசினால், நானும் பேச வேண்டும் என்பது கட்டாயம் இல்லை” என்றார்.
பாகிஸ்தான் ராணுவ தளபதி கமர் ஜாவெத் பாஜ்வாவை கட்டி அணைத்த விவகாரத்துக்கு பதில் அளித்த அவர், “ அது ஒரு உணர்வு பூர்வமான செய்கையே” என்றார். “ பாக்., ராணுவ தளபதி, இந்தியாவின் தேரா பாபா நானக் வளாகத்திலிருந்து குருத்வார் கர்தார்பூர் சாஹிப்க்கான வழிய திறக்கு முயற்சி செய்வதாக கூறினார். அதனை அடுத்து நடந்தது, உணர்வு பூர்வமானது” என்று கட்டி அணைத்ததற்கு விளக்கம் அளித்துள்ளார்.
இம்ரான் கான் பதவி ஏற்பு விழாவில் கலந்து கொண்ட ஒரே இந்தியர் சித்து என்பது குறிப்பிடத்தக்கது. சித்து விளக்கம் அளித்து தன்னை தற்காத்துக் கொண்ட போதும், தொடர்ந்து அவர் மீதும், ராகுல் காந்தி மீதும் விமர்சனங்கள் பாய்ந்து வருகின்றன.