This Article is From Jul 23, 2018

'இந்தியாவிற்கு சாதகமாக நடக்கிறார் நவாஸ் ஷெரீஃப்' - குற்றம் சாட்டும் இம்ரான் கான்

நவாஸ் ஷெரீஃப் பாகிஸ்தானின் ஆயுதப்படை மற்றும் நிறுவனங்களின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்த முயற்சித்து வருகிறார் என குற்றம் சாட்டினார் இம்ரான் கான்

'இந்தியாவிற்கு சாதகமாக நடக்கிறார் நவாஸ் ஷெரீஃப்' - குற்றம் சாட்டும் இம்ரான் கான்
Karachi:

கராச்சி : சிறை தண்டனை அனுபவித்து கொண்டிருக்கும் முன்னாள் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் இந்திய நாட்டின் நலனை பேணுகிறார் என்றும் ஜூலை 25 பொதுத் தேர்தல்களின் நம்பகத்தன்மையைக் கெடுக்க முயற்சிக்கிறார் என்றும் அந்நாட்டை சேர்ந்த தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சி தலைவர் இம்ரான் கான் குற்றம் சாட்டியுள்ளார்.

65 வயதான இம்ரான் கான் ஒரு மூத்த அரசியல்வாதி மற்றும் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆவார். பொது தேர்தல் மீதான மக்களின் நம்பிக்கையை அழிக்க மிகப்பெரிய நாடகமே நடப்பதாகவும், இந்த சதிக்கு பின்னால் இருப்பது நவாஸ் ஷெரீஃப் மற்றும் வேறு சிலர்தான் என்றும் கராச்சியில் ஒரு தேர்தல் பொதுக்கூட்டத்தில் பேசியுள்ளார் இம்ரான் கான்.

"அவரது கட்சி தொடர்ச்சியாக தேர்தலில் தோல்வியடைந்து வருவதால், தேர்தல் நடத்தப்படும் விதத்தில் மோசடி நடப்பதாக கூறுகிறார். இந்த தேர்தல்களில் முறைகேடு இருப்பதாக இந்திய ஊடகங்களும் கூறி வருகின்றன. இது பாகிஸ்தான் தேசத்திற்கு எதிரான மிகப்பெரிய சதி" என்று பேசினார் இம்ரான் கான்.

ஊழல் வழக்கில் கைதாகி ராவல்பிண்டியில் உள்ள அடியளா சிறையில் 10 ஆண்டுகள் கடங்காவல் தண்டனை அனுபவித்து வரும் நவாஸ் ஷெரீஃப், எப்பொழுதுமே பாகிஸ்தானின் ஆயுதப்படை மற்றும் நிறுவனங்களின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்த முயற்சித்து வருகிறார் என குற்றம் சாட்டினார் இம்ரான் கான்.

"Dawn Leaks மூலமாக பாகிஸ்தானின் ஆயுதப்படையின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்த முயற்சித்தது மட்டுமில்லாமல், மும்பை தீவிரவாத தாக்குதல்களுக்கு காரணம் பாகிஸ்தான் அமைப்புகள் தான் என்றும் கூறினார் நவாஸ் ஷெரீஃப்" என பேசினார் இம்ரான்.

மேலும், பாகிஸ்தானில் எப்பொழுதும் ஒரு பலவீனமான அரசு ஆட்சியில் இருப்பதையே இந்தியா விரும்புவதாகவும் குற்றம் சாட்டினார்.

.