Maharashtra Government Formation: சஞ்சய் ராவத்தை சந்தித்தார் சரத்பவார்.
Mumbai: மகாராஷ்டிராவில் நீடித்து வரும் அரசியல் சர்சைகளுக்கு மத்தியில் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத்தை நேரில் சந்தித்து சரத்பவார் நலம் விசாரித்தார்.
சிவசேனாவின் மூத்த தலைவரான சஞ்சய் ராவத் நேற்று பிற்பகல் நெஞ்சுவலி காரணமாக மும்பை லீலாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து, ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை எடுத்துக்கொண்ட அவரை சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் உள்ளிட்ட மூத்த அரசியல் தலைவர்கள் நேரில் சென்று நலம் விசாரித்து வருகின்றனர்.
காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸூடன் கூட்டணி அமைப்பதற்காக தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து விலக வேண்டும் என்ற நிபந்தனையை நிறைவேற்றும் வகையில், மத்திய அமைச்சர் பதவியையும் சிவசேனா ராஜினாமா செய்துள்ளது.
இதனிடையே, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு தொலைபேசி மூலம் அழைப்பு விடுத்த சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே கூட்டணிக்கு ஆதரவு தரும்படி கோரிக்கை விடுத்துள்ளார். எனினும், காரிய கமிட்டியில் ஆலோசனை நடத்திவிட்டு திரும்ப அழைப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிரா ஆளுநர் பகத்சிங் கோஷியாரி நேற்று மாலை தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத்பவாருக்கு ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்துள்ளார். ஆட்சி அமைக்க மேலும், 48 மணி நேரம் அவகாசம் கேட்ட சிவசேனாவுக்கு மறுப்பு தெரிவித்த ஆளுநர் 3வது பெரும்பான்மை கொண்டுள்ள கட்சி என்ற அடிப்படையில் தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு அழைப்பு விடுத்துள்ளார். தொடர்ந்து, தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு இன்று இரவு 8.30 வரை கெடுவும் விதித்துள்ளார்.