This Article is From Nov 27, 2019

சரத் பவார் பக்கம் திரும்பிய அஜித் பவாருக்கு கட்சியில் உயர் பதவி அளிக்கப்பட வாய்ப்பு!!

மகாராஷ்டிராவில் கடந்த சில வாரங்களாக இருந்து வந்த அரசியல் குழப்பம் தற்போது முடிவுக்கு வந்துள்ளது. மாநிலத்தின் முதல்வராக சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே நாளை பொறுப்பேற்க உள்ளார்.

பாஜக கூட்டணி ஆட்சியின்போது துணை முதல்வராக அஜித் பவார் பொறுப்பில் இருந்தார்.

New Delhi:

பாஜக கூட்டணியில் இருந்து விலகி சரத் பவார் பக்கம் திரும்பியுள்ள அஜித் பவாருக்கு கட்சியில் உயர் பதவி அளிக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. 

பாஜகவின் தேவேந்திர பட்னாவீசுடன் இணைந்து ஆட்சியமைக்க உதவியபோது, அஜித்பவாரின் கட்சிப் பொறுப்பு பறிக்கப்பட்டு ஜெயந்த் பாட்டீலிடம் வழங்கப்பட்டது. இதன்பின்னர், நேற்று அஜித் பவார் தனது துணை முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். தனிப்பட்ட காரணங்களுக்காக இந்த நடவடிக்கையை மேற்கொண்டதாக அவர் தெரிவித்திருந்தார். 

ராஜினாமாவைத் தொடர்ந்து அஜித் பவார் தனது சித்தப்பா சரத் பவார், அவரது மகள் சுப்ரியா, சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேவின் மகன் ஆதித்யா தாக்கரேவை நேரில் சந்தித்து விளக்கம் அளித்தார். 

சரத் பவாரின் இல்லத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பு சுமார் 4 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்தது. அப்போது, அஜித் பவாரை கட்சியில் மீண்டும் சேர்த்துக் கொண்டு, உயர் பொறுப்பை வழங்குவது என முடிவு எடுக்கப்பட்டதாக தெரிகிறது. 

இந்த நிலையில் இன்று காலை எம்எல்ஏக்கள் பதவியேற்பு நிகழ்ச்சி மகாராஷ்டிரா சட்டமன்றத்தில் நடைபெற்றது. அப்போது, அஜித் பவாரை ஆரத் தழுவி சரத் பவாரின் மகள் சுப்ரியா வரவேற்றார். 

இதன் தொடர்ச்சியாக, மகாராஷ்டிராவில் சிவசேனா தலைமையில் அமையவுள்ள அரசில், அஜித் பவாரும் இடம்பெறுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முடிவை சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே எடுத்ததாக அஜித் பவார் தெரிவித்தார். 

கட்சியில் கலகத்தை ஏற்படுத்தி துணைமுதல்வரான அஜித் பவார் மீண்டும் சரத்பவாருடன் ஐக்கியமாகியுள்ள நிலையில் அவருக்கு மீண்டும் உயர் பொறுப்பு கட்சியில் வழங்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அஜித் பவாருக்கு ஆட்சியில் அமைச்சர் பொறுப்பு வழங்கப்படுமா என்பது சரத்பவாரின் கையில்தான் உள்ளது என்கின்றன தேசியவாத காங்கிரஸ் வட்டாரங்கள். 

.