This Article is From Dec 25, 2019

CAA-க்கு எதிராக 1 லட்சம் பேர் கலந்துகொண்ட மாபெரும் பேரணி!

கடந்த டிச.9ம் தேதி மக்களவையில் இந்த சர்ச்சைக்குரிய குடியுரிமை திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து, அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அசாமின் தேயிலை தலைநகரத்தில் போராட்டம் நடைபெற்று வருகிறது.

CAA-க்கு எதிராக 1 லட்சம் பேர் கலந்துகொண்ட மாபெரும் பேரணி!

திப்ருகார் மற்றும் டின்சுகியாவில் விதிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்ட சில மணி நேரங்களிலேயே இந்த பேரணி நடந்தது.

Guwahati:

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக அசாமில் நேற்று நடந்த பேரணியில் சுமார் ஒரு லட்சம் பேர் வீதிகளில் திரண்டதாக அனைத்து அசாம் மாணவர் சங்கம் (AASU) தெரிவித்துள்ளது. 

மேலும், இதுவே குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நடந்த மிகப்பெரிய பேரணி என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். அசாம் முதல்வர் சர்பானந்த சோனோவாலின் சொந்த ஊரான திப்ருகாரில் நடைபெற்ற இந்த மாபெரும் பேரணி, அமைதியான முறையில் நடந்து முடிந்தது. 

இதுகுறித்து மாணவர் அமைப்பின் செயலாளர் லுரின் ஜோதி கோகாய் கூறும்போது, இந்து மற்றும் முஸ்லீம் என்ற பெயரில் சட்டவிரோதமாக வந்த வெளிநாட்டினரை நாங்கள் ஏற்றுக் கொள்ள மாட்டோம் என்று அனைத்து பொது மக்களும் ஒன்றுபட்டு குரல் எழுப்பினர். இது முழு அசாமில் நடந்த மிகப்பெரிய பேரணியாகும்.

கடந்த டிச.9ம் தேதி மக்களவையில் இந்த சர்ச்சைக்குரிய குடியுரிமை திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து, அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அசாமின் தேயிலை தலைநகரத்தில் போராட்டம் நடைபெற்று வருகிறது. நேற்றைய தினம் நடந்த ஆர்ப்பாட்டங்கள் அனைத்தும் அசாம் மாணவர் சங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்டதாகும். 

திப்ருகார் மற்றும் டின்சுகியாவில் விதிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்ட சில மணி நேரங்களிலேயே இந்த பேரணி நடந்தது. இதேபோல், அங்கு கடைகள் மற்றும் பிற நிறுவனங்களுக்கு விதிக்கப்பட்ட கட்டுபாடுகளும் தளர்த்தப்பட்டது. 

அசாமின் தேஸ்பூர், டெர்கான் மற்றும் கோலாகாட் உள்ளிட்ட பிற மாவட்டங்களிலும் இதேபோன்ற மாபெரும் பேரணிகள் நடத்தப்பட்டன. அசாமில் உள்ள பல்வேறு இனக்குழுக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதை நோக்கமாகக் கொண்ட பல்வேறு திட்டங்களை மாநில அரசு அறிவித்த போதிலும் இந்த எதிர்ப்புக்கள் வந்துள்ளன.

ஆனால், அசாம் அரசால் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் நீண்டகால கோரிக்கைகள் மற்றும் குடியுரிமைச் சட்டத்தை எதிர்ப்பதில் பேச்சுவார்த்தை நடத்த முடியாதவை என்று திப்ருகரில் நடந்த மாணவர்கள் சங்க பேரணியில் கலந்து கொண்டவர்கள் தங்கள் உணர்வுகளை எதிரொலித்தனர்.

இந்தியாவில் முதன்முறையாக மதத்தை குடியுரிமைக்கான அடிப்படையாக கொண்டு இயற்றபட்ட குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடுமுழுவதும் பலத்த எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. ஆனால், அரசோ மத துன்புறுத்தல் காரணமாக இந்தியாவுக்கு தப்பி வந்த அந்த மூன்று முஸ்லீம் ஆதிக்க நாடுகளை சேர்ந்த சிறுபான்மையினர் குடியுரிமை பெற இந்த சட்டம் உதவும் என்கிறது. 

.